ஜுலனுக்காகவே தொடரை வெல்ல விரும்புகிறோம்... மந்தனா உற்சாகம்

இங்கிலாந்து மகளிர் அணியுடன் நடக்கும் ஒருநாள் போட்டித் தொடரை வென்று அதை வேகப் பந்துவீச்சாளர் ஜுலன் கோஸ்வாமிக்கு அர்ப்பணிக்க விரும்புவதாக இந்திய அணி துணை கேப்டன் ஸ்மிரிதி மந்தனா கூறியுள்ளார். இங்கிலாந்துடன் நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச, இங்கிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன் எடுத்தது. வியாட் 43, சோபி 31, டங்க்லி 29, ஆலிஸ் டேவிட்சன் 50*, சார்லி டீன் 24* ரன் எடுத்தனர். ஜுலன் கோஸ்வாமி 10 ஓவரில் 2 மெய்டன் உள்பட 20 ரன் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார்.

அடுத்து களமிறங்கிய இந்தியா 44.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 232 ரன் எடுத்து வென்றது. மந்தனா 91 ரன் (99 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்), யஸ்டிகா 50, கேப்டன் ஹர்மன்பிரீத் 74* ரன் (94 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினர். சிறந்த வீராங்கனை விருது பெற்ற மந்தனா கூறுகையில், ‘இந்த தொடருடன் ஓய்வு பெற உள்ள ஜுலன் கோஸ்வாமிக்காகவே தொடரை வென்று அர்ப்பணிக்க விரும்புகிறோம். அவரது பந்துவீச்சு இப்போதும் அமர்க்களமாக உள்ளது. டி20 போட்டிகளை விட, ஒருநாள் போட்டிகளில் என்னால் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிகிறது. டி20ல் ரன் குவிப்பு வேகத்தை அதிகரிக்க கூடுதல் முயற்சி போட வேண்டி உள்ளது’ என்றார்.

Related Stories: