உத்திரமேரூரில் இடிந்து விழும் நிலையில் சார் பதிவாளர் அலுவலகம்; புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே இடிந்து விழும் நிலையில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் பேரூராட்சி சன்னதி தெருவில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பதிவாளர் உட்பட 15க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த அலுவலகத்தில், உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்களது முக்கிய ஆவணங்கள் பதிவு செய்வது மட்டுமின்றி பாதுகாக்கப்பட்டும் வருகிறது. தினமும் பத்திரப்பதிவு, திருமணப்பதிவு என பதிவுத்துறை சம்மந்தமாக நாளொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

ஓடுகளால் வேயப்பட்டுள்ள இந்த அலுவலக கட்டிடமானது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. தற்போது இந்த கட்டிடம் பழுதடைந்துள்ளது. எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மழை காலங்களில், இங்கு பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்கள் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்துடனே இங்கு பணியாற்றும் ஊழியர்களின் நிலை உள்ளது. மேலும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத இந்த கட்டிடத்திற்கு வரும் முதியவர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினர் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே இந்த சார் பதிவாளர் அலுவலகத்தை அகற்றி அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய சார் பதிவாளர் அலுவலகம் கட்டி தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: