மோசமான கழிவு நீர் மேலாண்மை ராஜஸ்தான் அரசுக்கு ரூ.3,000 கோடி அபராதம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி

புதுடெல்லி: குப்பைகள், கழிவு நீர்  மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியதற்காக ராஜஸ்தான் அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.3 ஆயிரம் கோடி அபராதம் விதித்துள்ளது. கழிவு நீர், குப்பை மேலாண்மை தொடர்பாக கடந்த 2014, 2017ம் ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது. அதன்படி  குப்பைகள், கழிவு நீர் பிரச்னைகளை தேசிய பசுமை தீர்ப்பாயம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் பல இடங்களில் ஆறுகளில் கழிவு நீர் கலப்பு, காற்று மாசுபாடு, 100 இடங்களில் தொழிற்சாலை கழிவுகளால் சுகாதார சீர்கேடு மற்றும் சட்ட விரோத மணல் கடத்தல்  ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

இது தொடர்பான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடக்கிறது. நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல், சுதிர் அகர்வால், நிபுணர் குழு உறுப்பினர் செந்தில்வேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள்,  குப்பைகள், கழிவு நீர் மேலாண்மை முறையாக செயல்படுத்த தவறியதற்காக ராஜஸ்தான் அரசுக்கு கடுமையான அபராதம் விதித்தனர். இதில், தினமும் 1,250 மில்லியன் லிட்டர் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யாததற்காக ரூ.2,500 கோடியும், விஞ்ஞான ரீதியாக குப்பைகளை அகற்றாததற்கு அபராதமாக  ரூ.555 கோடியும் விதிக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த தொகையை 2 மாதத்துக்குள் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: