உலக பணக்காரர்களில் 2ம் இடத்தில் அதானி: சிறிது நேரமே நீடித்தார்

புதுடெல்லி: குஜராத் தொழிலதிபரான கவுதம் அதானி, உலக பணக்காரர்கள் பட்டியலில் நேற்று 2ம் இடத்திற்கு முன்னேறினார். ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் மீண்டும் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டார். குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி, சுரங்கம் முதல் விமான நிலையம் வரை பல்வேறு தொழில்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். இதனால், கடந்த 2014ம் ஆண்டு ரூ.40 ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருந்த இவர் 8 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடிக்கு அதிபதி ஆகி உள்ளார். ஆசியாவின் நம்பர்-1 பணக்காரர் இடத்தை பிடித்த அதானி, கடந்த மாதம் உலக பணக்காரர்கள் பட்டியலிலும் 3வது இடத்திற்கு முன்னேறினார்.

இந்நிலையில், உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிடும் ப்ளூம்பெர்க் தரவரிசையில் நேற்று அதானி, அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசை முந்தி 2ம் இடத்தை பிடித்தார். ஆனால் இது அதிக நேரம் நீடிக்கவில்லை. அடுத்த சிறிது நேரத்திலேயே பெசோஸ் மீண்டும் 2வது இடத்தை பிடித்தார். தற்போது அதானி ரூ.11.77 லட்சம் கோடியுடன் 3வது இடத்திலும், பெசோஸ் ரூ.11.85 லட்சம் கோடியுடன் 2வது இடத்திலும் உள்ளனர்.

எலான் மஸ்க் ரூ.20.85 லட்சம் கோடியுடன் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார். மூத்த மகனுக்கு சிமென்ட் கம்பெனி: இந்தியாவில் 2வது மிகப்பெரிய சிமென்ட் தயாரிப்பு நிறுவனமான அம்புஜா சிமென்ட் மற்றும் ஏசிசி நிறுவனம் ஆகியவற்றை ரூ.51 ஆயிரம் கோடிக்கு அதானி குழுமம் வாங்குகிறது. இந்த 2 நிறுவனங்களின் இயக்குநராக அதானியின் மூத்த மகன் கரண் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: