உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள், அண்டை நாடுகளில் மருத்துவ படிப்பை தொடர நடவடிக்கை எடுத்திடுக: சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

டெல்லி: உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள், அண்டை நாடுகளில் மருத்துவ படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன்-ரஷ்யா இடையே ஏற்பட்ட போர் காரணமாக உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நாடு திரும்பி உள்ளனர். இவர்களை இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயில்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்ற குழு, ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தது.

ஆனால், இது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையமும், ஒன்றிய அரசும் எந்த பதிலும் கூறவில்லை. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம்,  உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு இந்திய பல்கலைக் கழகங்களில் படிப்பை தொடர ஏற்பாடு செய்து தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது. இந்நிலையில், உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் மருத்துவ கல்வியை இந்தியாவில் நிறைவு செய்ய அனுமதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, உக்ரைனில் இருந்து மாணவர்கள் அண்டை நாடுகளில் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ இணையதளத்தை ஏற்படுத்தவும் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இறுதி செமஸ்டர் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ பட்டம் கிடைப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்யும் என சோசிலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார். தொடர்ந்து, வழக்கு விசாரணையை அடுத்த வெள்ளிக்கிழமைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Related Stories: