கோவில்பட்டி அருகே பரபரப்பு; நடுரோட்டில் லாரி கவிழ்ந்து ரூ.3 லட்சம் முட்டைகள் நாசம்: போக்குவரத்து கடும் பாதிப்பு

கோவில்பட்டி: கோவில்பட்டியில் நடுரோட்டில் லாரி கவிழ்ந்ததில் ரூ.3 லட்சம் மதிப்பிலான வாத்து முட்டைகள் உடைந்து நாசமாகின. லாரியை மீட்கும் பணி தாமதமானதால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. தஞ்சாவூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு 50 ஆயிரம் வாத்து முட்டைகளை ஏற்றிக் கொண்டு நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் லாரி புறப்பட்டது. லாரியை கள்ளக்குறிச்சி மாவட்டம், வடமருதூரைச் சேர்ந்த மனோஜ்குமார் ஓட்டினார். இதே ஊரைச் சேர்ந்த பால்ராஜ் கிளீனராக இருந்தார்.

இந்த லாரி, நேற்று காலை கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூர் பாலத்தில் வந்த போது திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த அனைத்து முட்டைகளும் உடைந்து நாசமாயின. ரோட்டின் நடுவே லாரி கிடந்ததால் அந்த பாலத்தின் இருபுறம் வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. வாத்து முட்டை தலா ரூ.6க்கு விற்கப்படுவதால் நாசமான 50 ஆயிரம் முட்டைகளின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

தகவலறிந்த நாலாட்டின்புத்தூர் எஸ்ஐ ஆர்தர்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக லாரி மீட்பு வாகனம் கொண்டு வரப்பட்டது. இந்த வாகனம் மூலம் கயிறு கட்டி லாரியை மீட்கும் போது கயிறு அறுந்து விட்டது. இதையடுத்து கிரேன் கொண்டு வரப்பட்டு, விபத்துக்குள்ளான லாரி மீட்கப்பட்டது. இதன் காரணமாக சுமார் 3 மணி நேரம் கழித்து நாலாட்டின்புத்தூர் பாலத்தில் போக்குவரத்து மீண்டும் சீரானது.

Related Stories: