மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவால் பண்ணவாடி நீர்த்தேக்க பகுதியில் முழுமையாக தெரியும் நந்தி சிலை

மேட்டூர்: மேட்டூர் அணையில் தண்ணீர் வற்றியதால், நீர்த்தேக்க பகுதியான பண்ணவாடி பரிசல் துறையில் ஜலகண்டேசுவரர் ஆலய நந்தி சிலை முழுமையாக தெரிகிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணை கட்டப்பட்டபோது, நீர்தேங்கும் பகுதிகளில் இருந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள், கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். தங்களது கிராமங்களில் இருந்து வெளியேறிய மக்கள், தங்களின் கோயில்களையும், விளை நிலங்களையும் அப்படியே விட்டு விட்டு வெளியேறினர். அப்படி அந்த மக்கள் விட்டுச்சென்ற கோயில்களில் பண்ணவாடி பரிசல் துறையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயம், 100 அடி உயரம் கொண்ட கோபுரங்களை உடைய கிறிஸ்தவ ஆலயம், கீரை காரனூரில் உள்ள சோழ பாடி வீரபத்திரன் கோயில், மீனாட்சி அம்மன் ஆலயம் முக்கியமானது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும் போதெல்லாம், ஆலயங்கள் முழுமையாக நீரில் மூழ்கி விடும். அணையின் நீர்மட்டம் குறையும்போது ஆலயங்கள் தெரிய துவங்கும். தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49.05 அடியாக சரிந்ததால் நீர்த்தேக்க பகுதியான பண்ணவாடி பரிசல் துறையில் கிறிஸ்தவ ஆலயத்தின் கோபுரமும், நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஜலகண்டேஸ்வரர் ஆலயமும் தெரிகிறது. கடந்த 90 ஆண்டுகளாக நீரில் இருந்தாலும், இந்த ஆலயங்கள் சிதையாமல் உள்ளன. சுட்ட செங்கற்களாலும் சுண்ணாம்பு கலவையாலும் கட்டப்பட்ட இந்த ஆலயங்கள் கலை நுணுக்கத்துடன் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக கட்டப்பட்டுள்ளது.

ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தின் முகப்பில் பிரமாண்டமான நந்தி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. நந்தி சிலைக்கு எதிரே கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. சிலைக்கும் ஆலயத்தின் உள்ளே உள்ள கர்ப்பக்கிரகத்திற்கும் இடையே, சில மீட்டர் தூரம் இடைவெளி உள்ளது. நந்தி சிலைக்கும் கீழ்ப்பகுதியில் நுழைந்து சென்று, சுவாமியை தரிசிக்கும் வகையில் ஆலயம் அமைக்கப் பட்டுள்ளது. தற்போது நந்தி சிலைக்கு கீழே உள்ள நுழைவாயில் முதல், கர்ப்பக்கிரகம் வரை சேரும் சகதியும் நிறைந்து, ஆட்கள் உள்ளே நுழையாதபடி அடைபட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆலயத்தின் நுழைவாயிலில் நுழைந்து, உள் பிரகாரத்தை காண முடியும். ஆனால் தற்போது சேரும் சகதியும் நிரம்பி முழுமையாக மூடப்பட்டுள்ளது. இந்த ஆலயங்களில் உள்ள செங்கற்களையும், அதை காண செல்லும் சுற்றுலா பயணிகளும், மீனவர்களும் பெயர்த்து எடுப்பதால் சில இடங்களில் மட்டும் பெயர்ந்துள்ளது. கிறிஸ்தவ ஆலயத்தின் இரட்டை கோபுரங்களில், ஒரு கோபுரத்தை சில வருடங்களுக்கு முன்பு விஷமிகள் சிலர் மீன்பிடிக்க போடும் தோட்டாவை போட்டதால் ஒரு கோபுரம் சாய்ந்து போனது, தற்போது ஒரு கோபுரம் மட்டுமே தெரிகிறது.

 

 

The post மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவால் பண்ணவாடி நீர்த்தேக்க பகுதியில் முழுமையாக தெரியும் நந்தி சிலை appeared first on Dinakaran.

Related Stories: