ஏற்காடு கோடை விழா நாளை தொடக்கம்: இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்

ஏற்காடு: ஏற்காடு கோடை விழா நாளை தொடங்குகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் இன்று தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமான ஏற்காட்டில் 47வது கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி நாளை (22ம் தேதி) தொடங்குகிறது. வரும் 26ம் தேதி வரை, 5 நாட்களுக்கு நடைபெறவுள்ள இக்கோடை விழாவை முன்னிட்டு, சுற்றுலா பயணிகளுக்கென பல்வேறு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. அண்ணா பூங்காவில் பழங்கள், காய்கறிகள், பிரமாண்ட காற்றாலை, சுற்றுச்சூழலில் கடல் வாழ் உயிரினங்கள், நண்டு, சிற்பி, ஆக்டோபஸ், நட்சத்திர மீன், கடல் குதிரை, கார்ட்டூன் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களை மலர்கள் மூலம் செய்து வருகின்றனர். இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ண மலர் தொட்டிகளைக் கொண்டு, மலர்க் கண்காட்சி அமைக்கப்பட்டு வருகிறது. அண்ணா பூங்காவில் வண்ண விளக்குகள் மற்றும் ஏரி பூங்காவில் செல்பி பாயிண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி கோடை விழாவை தொடங்கி வைக்கிறார்.

நாளை மலையேறுதல் போட்டி காலை 6.30 மணிக்கு ஏற்காடு அடிவாரத்தில் வனத்துறை சோதனைச் சாவடியிலிருந்து குண்டூர் மலைப்பாதை வழியாக, ஏற்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் முடிவடையும் வகையில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் 15 வயது முதல் 45 வயது வரை முழு உடல் ஆரோக்கியத்துடன் உள்ளவர்கள் தங்கள் சொந்த பொறுப்பின் பேரில் 99658 34650 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பங்கேற்கலாம். அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை படகு போட்டி நடக்கிறது. 23ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை அடுப்பிலா சமையல் போட்டியும், 23ம் தேதி மான்போர்ட் விளையாட்டு மைதானத்தில் ஆண்களுக்கான கால்பந்து போட்டியும், பெண்களுக்கான பந்து வீசுதல், 50 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், நின்று நிலை தாண்டுதல், கயிறு இழுத்தல் போட்டிகளும் நடக்கிறது. 25ம் தேதி காலை 10 மணி முதல் நாய்கள் கண்காட்சியும், 26ம் தேதி காலை 10 மணி முதல் குழந்தைகளின் தளிர் நடை போட்டியும் நடக்கிறது. மேலும் கொம்பு இசை, சிலம்பாட்டம், பறை இசை, மாடு ஆட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, பரதநாட்டிய நிகழ்ச்சி, நாட்டுப்புற பாடல்கள், கரகாட்டம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இவ்விழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

 

The post ஏற்காடு கோடை விழா நாளை தொடக்கம்: இறுதிக்கட்ட பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: