முதுமலை தெப்பக்காடு முகாமில் கும்கி பயிற்சி; ஆஸ்கர் விருது வென்ற படத்தில் இடம்பெற்ற ரகு உள்பட 5 யானைகள் பங்கேற்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் ஆசியாவின் மிக முக்கியமான புலிகள் காப்பகமாக உள்ளது. இந்த புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு, அபயாரணயம் என இரு யானைகள் முகாமில் 27 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள வளர்ப்பு யானைகளுக்கு கும்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் காட்டு யானைகளை பிடிப்பதற்கும், ஊருக்குள் வராமல் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்குமான பணிகளில் கும்கி யானைகள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. கும்கி பயிற்சி பெற்ற முதுமலை, இந்தர், அண்ணா, யானைகள் 60 வயது முடிந்த நிலையில பணி ஓய்வு பெற்றுள்ளது. பொம்மன், உதயன், விஜய், சீனிவாசன், கிருஷ்ணா, போன்ற யானைகள் கும்கி யானைகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முகாமில் உள்ள இளம் யானைகளுக்கு கும்கி பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டது.

இதில் ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படத்தில் இடம்பெற்ற ரகு, பொம்மி மற்றும் கிருஷ்ணா, கிரி, மசினி போன்ற யானைகளுக்கு நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் கும்கி பயிற்சி வழங்கப்படுகிறது. இதில், பொம்மி குட்டி யானைக்கு பாகனின் சொல் பேச்சை கேட்கும் பயிற்சியான காதை பிடித்து கொண்டு அதே இடத்தில் சுற்றுவது, நீளமான சங்கிலியை தரையில் போட்டு அதன் மேல் நடப்பது போன்ற பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ரகு யானைக்கு இரண்டு கால்களில் நிற்பது, இரண்டு கால்களையும் தூக்கி உப்பர் பரா, நீட் பைட் மற்றும் சங்கிலியை தரையில் போட்டு அதன் மேல் நடப்பது போன்ற பயிற்சியும், மசினி யானைக்கு தரையில் உட்காருவது, மண்டியிட்டு அமர்வது, படுத்துக் கொண்டே நோட்டமிடுவது போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

கிருஷ்ணா மற்றும் கிரி யானைக்கு காட்டு யானையை பிடித்து பின்புறம் முட்டி தள்ளி லாரியில் ஏற்றுவது உள்ளிட்ட அனைத்து பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. கிரி, கிருஷ்ணா, ரகு யானைகளுக்கு தங்கள் மனநிலையை சீராக வைத்துக்கொள்ள ஒரு மரத்துண்டில் நான்கு கால்களையும் அதன் மேல் வைத்து நிற்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இதில் காட்டு யானைகளை விரட்டுவது மற்றும் காட்டு யானைகளை கட்டுப்படுத்துவது குறித்து பல்வேறு கும்கி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

 

The post முதுமலை தெப்பக்காடு முகாமில் கும்கி பயிற்சி; ஆஸ்கர் விருது வென்ற படத்தில் இடம்பெற்ற ரகு உள்பட 5 யானைகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: