பள்ளம்பட்டி கிராமத்தில் போதிய வகுப்பறையின்றி தவிக்கும் அரசு தொடக்க பள்ளி மாணவர்கள்

*கூடுதல் கட்டிடம் கட்டித்தர கிராம மக்கள் வலியுறுத்தல்

அரூர் : பள்ளம்பட்டி கிராமத்தில் போதிய வகுப்பறை இன்றி பாடம் படிக்கும் மாணவர்களுக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த கே.ஈச்சம்பாடி ஊராட்சி பள்ளம்பட்டி கிராமத்தில் 200 மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் 50 ஆண்டுகளாக அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி தொடங்கிய காலம் முதல் 2 வகுப்பறைகள் கொண்ட ஒரு கட்டிடத்தில் மட்டும், 1 முதல் 5ம் வகுப்பு வரை செயல்பட்டு வந்தது. 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். பள்ளி தொடங்கிய காலத்தில் கட்டப்பட்ட பழைய ஓட்டு கட்டிடமாக இருந்தாலும், கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு

வகுப்புகள் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் பெய்த மழையின்போது சூறைக்காற்று வீசியதில், பள்ளம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை சூறைக்காற்றில் தூக்கி வீசப்பட்டது. இதனால் ஓடுகள் முழுவதும் சேதமாகி வகுப்புகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது.  

இந்நிலையில் தமிழக அரசு பழுதான கட்டிடங்களில் வகுப்புகள் நடத்த வேண்டாம் என அறிவுறுத்திய நிலையில், பள்ளம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அமர வைத்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் அங்கன்வாடி மையத்தில் உள்ள 2 அறைகளில் ஒரு அறை முழுவதும் அங்கன்வாடி குழந்தைகளும், மற்றொரு சிறிய அறையில் தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளும் படிக்கின்றனர். இந்நிலையில் மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் உபகரணங்களும் அதே சிறிய அறையில் வைக்கப்பட்டுள்ளதால், வகுப்புகளை எடுப்பதற்கும் மாணவர்கள் அமர்வதற்கும் மிகுந்த சிரமமாக உள்ளது.  

மேலும் 2 ஆசிரியர்கள் என்பதால், ஒரே சிறிய அறையில் வகுப்பு எடுக்க முடியாத சூழல் நிலவுவதால், பாதி மாணவர்கள் அருகில் உள்ள மரத்தடியிலோ அல்லது கோயில் வளாகத்திலோ அமர வைத்து பாடம் எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் மாவட்ட கலெக்டர், கல்வி அலுவலர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தமிழக அரசு பள்ளம்பட்டி அரசு தொடக்கப் பள்ளி கட்டிடத்தினை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, புதிய வகுப்பறைகளை கட்டிக் கொடுத்து மாணவர்கள் தனித்தனியாக அமர்ந்து பாடம் எடுக்க வகையில் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: