வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவது எப்படி? முன்னோட்ட பணிகளை கமிஷனர் ஆய்வு

வேலூர் : வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாகனங்களில் கொண்டு சென்று காலை சிற்றுண்டி வழங்குவது எப்படி? என்பது குறித்து கமிஷனர் அசோக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.தமிழகம் முழுவதும் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் வரும் 16ம்தேதி நடைமுறைக்கு வருகிறது. இத்திட்டத்துக்காக மாநிலம் முழுவதும் தலா ₹24.85 லட்சத்தில் சமையல் கூடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

வேலூர் மாநகராட்சியில் காட்பாடி காந்தி நகர், சத்துவாச்சாரி, கஸ்பா ஆகிய 3 இடங்களில் மைய சமையல் கூடங்கள் கட்டப்படுகின்றன. வேலூர் மாநகராட்சியில் மட்டும் இத்திட்டத்தின் கீழ் 48 பள்ளிகளில் பயிலும் 3 ஆயிரத்து 432 குழந்தைகள் பயனடைய உள்ளனர். இந்நிலையில் 16ம் தேதி தொடங்க உள்ள திட்டத்தால், மைய சமையல் கூட பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இன்றும், நாளையும் சோதனை அடிப்படையில் சமையல் கூடங்கள் செயல்பட்டு அங்கிருந்து பள்ளிகளுக்கு உணவுகளை எடுத்து சென்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்நிலையில் சமையல் கூடங்களில் இருந்து பள்ளிகளுக்கு வாகனங்களில் சிற்றுண்டி எடுத்து சென்று வழங்குவது எப்படி? என்பது குறித்து முன்னோட்ட பணிகளை கமிஷனர் அசோக்குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதாவது, சத்துவாச்சாரி, சைதாப்பேட்டை, கொசப்பேட்டை, கஸ்பா பள்ளிகளுக்கு சிற்றுண்டி கொண்டு செல்லும் வாகனங்கள் சமையல் கூடத்தில் இருந்து எவ்வளவு நேரத்திற்குள் செல்ல முடியும். ஒவ்வொரு பள்ளியில் எவ்வளவு மாணவர்கள் உள்ளனர்? அவர்களுக்கு உணவு வழங்க எவ்வளவு நேரம் ஆகும்? பள்ளி வளாகத்திற்குள் வாகனங்கள் நிறுத்தி வழங்க இடவசதி உள்ளதா? போன்றவை குறித்து உணவு கொண்டு செல்லும் வாகனங்களுடன் முன்னோட்ட பணிகளை ஆய்வு செய்தார்.

Related Stories: