திருப்புத்தூரில் வரலாற்று சிறப்பு வாய்ந்த சீதளி தெப்பக்குளம் சீரமைக்கப்படுமா? பக்தர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருப்புத்தூர் :  திருப்புத்தூரில் உள்ள திருத்தளிநாதர், யோகபைரவர் கோயிலின் தெப்பக்குளமான சீதளி குளத்தை சீரமைத்து, குளத்தைச் சுற்றி சேதமடைந்துள்ள நடைபாதை சீரமைக்க வேண்டும் என பொதுமககள், பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.திருப்புத்தூர் நகரின் மையத்தில் சீதளி தெப்பக்குளம் உள்ளது. திருக்கைலாய பரம்பரை திருவன்னாமலை குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச்சேர்ந்த, திருத்தளிநாதர் கோயிலின் தெப்பக்குளம் மிகவும் பழமையான வரலாறு மற்றும் புராண சிறப்பு பெற்றது. இக்குளம் கடந்த 2006-2011ல் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் தமிழக முதல்வராக இருந்தபோது சிறப்பு நிதியாக ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டு குளத்தின் கரைகள் நவீனப்படுத்தப்பட்டு, குளம் தூர் வாரப்பட்டது.

மேலும் குளத்தைச் சுற்றிலும் டைல்ஸ்கள் பொருத்தப்பட்டு நடைபாதையும் அமைக்கப்பட்டது. இதனையடுத்து சில மாதங்கள் முறையாக பராமரிககப்பட்டு பொதுமக்கள் அதிகளவில் குளத்தையும், நடைபாதையும் பயன்படுத்தி வந்தனர். சில வருடங்களாக போதிய தண்ணீர் இல்லாததால் பயன்பாடு இல்லாமல் இருந்தது. கடந்த ஒரு வருடமாக பெய்த மழைநீரும், பெரிய கண்மாயில் இருந்து கொண்டுவரப்பட்ட மழைநீராலும் குளம் நிரம்பியது. தற்போது இந்த குளத்தில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் குளித்து வருகின்றனர். ஆனால் தற்போது குளம் சுத்தப்படுத்தப்படாமல் இருப்பதால் பாசி படர்ந்து தண்ணீர் பச்சை நிறமாக மாறி காட்சியளிக்கிறது.  

இந்நிலையில், சில வருடங்களாக குளத்தின் வெளிப்புற கரையைச் சுற்றிலும் இரவிலும், அதிகாலையிலும் பலர் திறந்த வெளிக்கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். மேலும் குளத்தின் படிக்கட்டு மற்றும் நடைபாதையில் இரவில் திறந்து வெளி பாராகவும் சிலர் பயன்படுத்தி விட்டு, பாட்டில்களை படிக்கட்டில் போடுகின்றனர். மேலும் நடைபாதைக்காக போடப்பட்ட பேவர் பிளாக் கற்கள் அனைத்தும் பெயர்ந்து முற்றிலுமாக சேதமடைந்துவிட்டது.

இதனால் தற்போது இந்த நடைபாதையை யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் நடைபாதையின் இருபுறமும் செடிகள் மண்டியுள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம், இப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படாமல் தடுக்கவும், சேதமடைந்துள்ள நடைபாதையை சீரமைக்கவும், குளத்தைச்சுற்றி விளக்குகள் அமைக்கவும், குளத்தில் உள்ள பாசி மற்றும் குப்பைகளை அகற்றவும், குளத்தைச்சுற்றி முள்வேலி அமைக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும் என பக்தர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரியுள்ளனர்.

Related Stories: