தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் பதிவு ரத்தாகும்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி: ‘தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு 6 ஆண்டுகளுக்கு தொடர்ந்து தேர்தலில் போட்டியிடவில்லை என்றால், அந்த கட்சியின் அனுமதி ரத்து செய்யப்படும்,’ என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 2,796 ஆக உயர்ந்துள்ளது. 55 கட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள், நன்கொடைகள் மூலமாக ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து முறைகேடு செய்துள்ளதையும், ஹவாலா கும்பல் மூலம் இக்கட்சிகள் இயக்கப்படுவதையும் தேர்தல் ஆணையம் சமீபத்தில் கண்டுபிடித்தது.

இதையடுத்து, நாடு முழுவதும் வரித்துறை நடத்திய சோதனையில் பதிவு செய்யப்பட்ட முகவரியில் பல கட்சிகளில் இல்லாததும், பல நூறு கோடிக்கு வரி விலக்கு கோரியதும் தெரியவந்தது. இதனால், பதிவு செய்யப்பட்ட 2,174 அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, வருமான வரித்துறைக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில்  பதிவு செய்யப்பட்ட போலி அரசியல் கட்சிகள் எண்ணிக்கை 300 சதவீதம் உயர்ந்ததற்கு நன்கொடை பத்திரங்கள்தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 86 அரசியல் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட முகவரியில் இல்லாததால் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது.

* பதிவு செய்யப்பட்ட 253 அங்கீகரிக்கப்படாத கட்சிகள் செயல்படாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்சிகள் சின்னங்கள் ஆணை 1968ன்படி எந்தப் பலனையும் பெற தகுதியற்றவை.

* கடந்த மே 25ம் தேதி முதல் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் எண்ணிக்கை 537 ஆக உயர்ந்து உள்ளது.

* ஒவ்வொரு அரசியல் கட்சியும் அதன் பெயர், தலைமை அலுவலகம், அலுவலகம் ஆகியவற்றில் ஏதேனும் மாற்றம் இருந்தால் தெரிவிக்க வேண்டும்.

* பீகார், டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தர பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் 253 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் செயல்படாமல் இருக்கின்றன. இது குறித்து அனுப்பப்பட்ட நோட்டீசுக்கும் பதில் இல்லை. இக்கட்சிகள் ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை.

* தேர்தல்  ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் 5 ஆண்டுகளுக்குள் தேர்தலில் போட்டியிட வேண்டும். அதன் பிறகு, தொடர்ந்து போட்டியிட வேண்டும்.

* தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் பதிவு, ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: