புதுடெல்லி: காக்கி சீருடை தீப்பிடித்து எரிவது போன்று காங்கிரஸ் வெளியிட்ட புகைப்படத்திற்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த 7ம் தேதி தொடங்கினார். இப்பயணம் 5வது நாளான நேற்று முன்தினம் கேரளாவில் கால் பதித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் சீருடையான காக்கி கால்சட்டை தீப்பிடித்து எரியும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது. அதில், ‘வெறுப்பின் பிடியில் இருந்து நாட்டை விடுவிக்கவும், ஆர்எஸ்எஸ், பாஜ செய்த சேதத்தை சீர்படுத்துவோம். படிப்படியாக இலக்கை அடைவோம்’ என பதிவிடப்பட்டுள்ளது. அதன் கீழ், இந்திய ஒற்றுமை பயணம் முடியும் காலத்தை மறைமுகமாக குறிப்பிட்டு ‘இன்னும் 145 நாட்களே’ என்று பதிவிட்டுள்ளது.