தெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இங்கிலாந்து

லண்டன்: இங்கிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி அங்கு  தலா 3 ஆட்டங்களை கொண்ட ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர்களில் விளையாடியது. ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிய,    டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் தெ.ஆப்ரிக்கா கைப்பற்றியது. தொடர்ந்து  விளையாடிய டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

இந்நிலையில் கடைசி டெஸ்ட்  லண்டனின் கென்னிங்டன் அரங்கில்  செப்.8ம் தேதி தொடங்கியது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணம் காரணமாக 2வது நாள் ஆட்டம் ரத்தானது.அதனையடுத்து 3வது நாளான செப்.10ம் தேதி தான் ஆட்டம்  தொடங்கியது. முதல் இன்னிங்சில் தெ.ஆப்ரிக்கா 118ரன்னுக்கும், இங்கிலாந்து 158 ரன்னுக்கும் சுருண்டன. தொடர்ந்து 2வது இன்னிங்சை விளையாடிய தெ.ஆப்ரிக்கா 169ரன்னில் ஆல் அவுட்டானது. அதன் பிறகு 130 ரன் எடுத்தால் வெற்றி  என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 4வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 97ரன் எடுத்திருந்தது.

அதனையடுத்து 33ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கடைசி நாளான நேற்று 2வது இன்னிங்சை  இங்கிலாந்து தொடங்கியது. களத்தில் இருந்த  அலெக்ஸ் லீஸ் 39 ரன்னில் ஆட்டமிழந்தார். களத்தில் இருந்த ஜாக் 69, ஒல்லி போப் 11 ரன் விளாச கடைசி நாள் ஆட்டம் அரை மணி நேரத்தில்  முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து 22.3ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 130ரன் எடுத்து 9 விக்கெட்  வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. கூடவே இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.

Related Stories: