நீலத்தநல்லூர் சோதனை சாவடியில் 10.50 டன் கடத்தல் நெல் மூட்டைகள் லாரியுடன் பறிமுதல்-லாரியை ஓட்டி வந்த 2 பேரிடம் விசாரணை

பாபநாசம் : நீலத்தநல்லூர் சோதனை சாவடியில் 10.50 டன் கடத்தல் நெல் மூட்டைகள் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. லாரியை ஓட்டி வந்த 2 பேரிடம் அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்.தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், வெளி மாவட்டங்களில் இருந்து எடுத்து வந்து நெல் விற்பனை செய்ய கூடாது என உத்தரவு அமலில் உள்ளது.

இதனால் வியாபாரிகள், வெளி மாவட்ட நெல் மூட்டைகளை கொண்டு வந்து தஞ்சாவூர் மாவட்ட நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதை தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல்துறை இயக்குனர் ஆபாஸ்குமார் உத்தரவின்பேரில், திருச்சி மண்டல குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மேற்பார்வையில், தஞ்சாவூர் சரக குடிமைபொருள் குற்ற புலனாய்வு துறை டி.எஸ்பி சரவணன் தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட குறறபுலனாய்வு துறை உதவி ஆய்வாளர் விஜய் மற்றும் போலீசார் மாவட்ட எல்லையான கும்பகோணம் அருகே நீலத்தநல்லூர் சோதனை சாவடியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரியலூர் மாவட்டத்தில் இருந்து ஒரு லாரி வந்தது. அந்த லாரியை போலீசார் வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 10½ டன் நெல் மூட்டைகள் இருந்தது. இது குறித்து லாரியில் இருந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் அரியலூர் மாவட்டம் சாத்தாம்பாடி வடக்கு தெருவை சேர்ந்த வெற்றிமணி (22), அரியலூர் நாகமங்கலத்தை சேர்ந்த முருகேசன் (52) என்பது தெரியவந்தது.

 மேலும் அவர்கள் வெளி மாவட்டத்தில் இருந்து விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நெல் வாங்கி, தஞ்சாவூர் மாவட்ட கொள்முதல் நிலையங்களில் அதிக விலைக்கு விற்க கொண்டு வந்ததும், டிரான்சீட் படிவம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள், பில்கள் முறையாக இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து நெல் மூட்டைகளோடு லாரியையும் பறிமுதல் செய்து திருநாகேஸ்வரம் அரசு நவீன அரிசி ஆலை நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். அங்கு வெற்றிமணி, முருகேசன் ஆகியோரிடம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கும்பகோணம் டிவிசன் டெப்டி மேனேஜர் இளங்கோவன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். முழுமையான விசாரணைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை அமையும். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: