வேலூர் மார்க்கெட்டில் வரத்து குறைவால் மீன்களின் விலை உயர்வு

வேலூர் :  வேலூர் மார்க்கெட்டில் வரத்து குறைவால் மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.வேலூர் மீன் மார்க்கெட்டிற்கு சென்னை, தூத்துக்குடி, நாகப்பட்டினம், கொச்சி, கோழிக்கோடு, மங்களூரு ஆகிய இடங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 5 முதல் 10 பெரிய சரக்கு லாரிகளில் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த சில வாரங்களாக மீன்களின் வரத்து குறைவாக இருந்தது. இதனால் அனைத்து வகை கடல் மீன்களின் விலையும் உச்சத்திலேயே இருந்தது.

இந்நிலையில், நேற்று ஒரு கிலோ வஞ்சிரம் ₹500 முதல் ₹650க்கும், சங்கரா ₹150, இறால் ₹450 முதல் ₹500க்கும், நண்டு ₹400, பாறை மீன் ₹300, வெள்ளை கொடுவா ₹350, வவ்வால் ₹150க்கம் விற்கப்பட்டது. மீன்களின் விலை கடந்த வாரத்தை விட ₹30 முதல் ₹80 வரை உயர்ந்து காணப்பட்டது. இதுகுறித்து மீன் வியாபாரிகள் கூறுகையில், ‘வேலூர் மீன் மார்க்கெட்டிற்கு வழக்கமாக கொண்டு வரப்படும் லாரிகளை விட தற்போது 4 அல்லது 5 லாரிகளில் மீன்கள் வரத்து இருந்தது.

வரத்து குறைவு காரணமாக அனைத்து மீன்களின் விலையும் அதிகரித்துள்ளது. அடுத்த வாரம் புரட்டாசி மாதம் பிறக்க உள்ளதால், அசைவ பிரியர்கள் இறைச்சி உண்ணமாட்டார்கள். இதனால், இந்த வாரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளில் கூட்டம் சற்றே அதிகரித்துள்ளது’ என்றனர்.

Related Stories: