கூடலூர், நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை குந்தா, அவலாஞ்சி அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்

ஊட்டி : நீலகிரி  மாவட்டத்தில் கூடலூர் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளான அப்பர்பவானி,  அவலாஞ்சி பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றன. நேற்று ஒரே நாளில் 708 மிமீ மழை பதிவாகியுள்ளது. குந்தா மற்றும் அவலாஞ்சி அணைகளில் இருந்து உபரி நீர்  வெளியேற்றப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ஜூன்  மாதம் துவங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை தாமதமாக ஜூலை மாதம் துவங்கியது.  அதன் பின் தொடர்ச்சியாக கடந்த இரு மாதங்களுக்கு மேலாக பரவலாக கன மழை  பெய்து வருகிறது.

குறிப்பாக ஊட்டி, குந்தா, கூடலூர் சுற்று வட்டார  பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. கனமழையால்  மண்சரிவு,  மரங்கள் விழுதல், வீடு இடிதல் உள்ளிட்ட இடர்பாடுகள் ஏற்பட்டன. சாலைகளில்  விழுந்த மரங்கள், மண்சரிவுகள் போன்றவைகள் உடனுக்குடன் அகற்றப்பட்டு சரி  செய்யப்பட்டன. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் பைக்காரா,  அவலாஞ்சி, எமரால்டு, கிளன்மார்கன், குந்தா உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை  எட்டின. இதனால் பாதுகாப்பு கருதி இந்த அணைகளில் இருந்து உபரி நீர்  வெளியேற்றப்பட்டது.

தொடர்ந்து கடந்த மாத இறுதியில் இருந்து மழை சற்று  குறைந்து காணப்பட்டது. பகல் நேரங்களில் வெயிலான காலநிலையும், மேகமூட்டமான  காலநிலையும் நிலவி வந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கூடலூர்,  பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் குந்தா  தாலுகாவிற்கு உட்பட்ட அவலாஞ்சி, அப்பர்பவானி போன்ற நீர்பிடிப்பு  பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை  பாதித்துள்ளது.

அதே சமயம் ஊட்டி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில்  பனிமூட்டத்துடன் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால்  கடும்  குளிர் நிலவுகிறது. குளிர் காரணமாக மக்கள் வெம்மை ஆடைகள் சகிதமாக நடமாடி  வருகிறார்கள். நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக பந்தலூரில் 136  மி.மீ.,யும், தேவாலாவில் 125 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது. அவலாஞ்சியில்  57 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு ஊட்டி -  கூடலூர் சாலையில் நடுவட்டம் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இரவு நேரம்  என்பதால் வாகன போக்குவரத்து குறைந்து காணப்பட்ட நிலையில்  நெடுஞ்சாலைத்துறையினர் ஜெசிபி., உதவியுடன் சாலையில் குவிந்திருந்த மண்  குவியலை அகற்றி சாலையை சீரமைத்தனர்.

அவலாஞ்சி, எமரால்டு, குந்தா அணைகள்  ஏற்கனவே நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அப்பகுதிகளில் பெய்து  வரும் தொடர் மழை காரணமாக அணைகளின் பாதுகாப்பு கருதி இரண்டாவது நாளாக  நேற்றும் குந்தா மற்றும் அவலாஞ்சி அணைகள் திறக்கப்பட்டு உபரி நீர்  வெளியேற்றப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில்  பெய்த மழையளவு காலை 8.30 மணி நிலவரப்படி (மி.மீ.,யில்): ஊட்டி 1.3,  நடுவட்டம் 30, கல்லட்டி 6, கிளன்மார்கன் 7, குந்தா 2, அவலாஞ்சி 57,  எமரால்டு 9, அப்பர்பவானி 28, குன்னூர் 2, கூடலூர் 40, தேவாலா 125,  பாடந்தொரை 100, ஓவேலி 12, பாடந்தொரை 136, சேரங்கோடு 57 என மொத்தம் 708.90  மி.மீ.,யும், சராசரியாக 24.44 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

Related Stories: