எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்க உஸ்பெகிஸ்தான் செல்கிறார் மோடி: வரும் 15, 16ல் பயணம்

புதுடெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 15ம் தேதி உஸ்பெகிஸ்தான் செல்கிறார்.

சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த 2001ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த அமைப்பின் உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்டில் வரும் 15, 16ம் தேதிகளில் நடக்கிறது.

இதில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி வரும் 15ம் தேதி உஸ்பெகிஸ்தான் செல்ல உள்ளார்.மாநாட்டில், கடந்த 2 ஆண்டாக அமைப்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. மாநாட்டின் இடையே, அமைப்பினர் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த மாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

கொரோனா பாதிப்புக்குப் பிறகு 2 ஆண்டுகள் கழித்து சீன அதிபர் ஜின்பிங் முதல் முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். உலகளாவிய பொருளாதார விநியோக சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளுக்கு மத்தியில் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்ய, சீன அதிபர்கள் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

*மோடியின் பரிசு பொருட்கள் ஏலம்

பிரதமர் மோடி பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், மக்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தனக்கு வழங்கும் பரிசு பொருட்களை ஏலம் விட வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதன் மூலம் கிடைக்கும் தொகை கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு வழங்கப்படுகிறது. இதுவரை, மோடியின் பரிசுப் பொருட்கள் 3 முறை ஏலம் விடப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் 1805, 2வது கட்டமாக 2772, 3வது கட்டமாக 1348 பொருட்கள் ஏலம் விடப்பட்டது. அவருடைய பிறந்தநாளான வரும் 17ம் தேதி, 4வது முறையாக அவருக்கு கிடைத்த பரிசு பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளன. ஆன்லைனில் நடத்தப்படும் இந்த ஏலம் அடுத்த மாதம் 2ம் தேதி வரை நடைபெறும்.

Related Stories: