வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே சாலையில் காத்திருக்கும் பொதுமக்கள்; போலீசாரை நியமிக்க கோரிக்கை

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து போலீசார் இல்லாததால் சாலையில் பேருந்துக்காக பொதுமக்கள் கத்திருக்கின்றனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, அப்பகுதியில் போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்து நெரிசலையும், பயணிகளையும் ஒழுங்குபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இங்கு, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  பேரூராட்சியில் பேருந்து நிலையம், ஒன்றிய அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், கருவூலக அலுவலகம், தாலுகா அலுவலகம், காவல் நிலையம், வங்கிகள் என பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.

இவை மட்டுமின்றி வாலாஜாபாத்தை சுற்றிலும் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ளவர்கள் வாலாஜாபாத் வந்து தான் இங்கிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு நகர்ப்புற பகுதிகளில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் சென்று வருகின்றனர். மேலும், இப்பகுதியில் உள்ள  மேல்நிலை, நடுநிலை பள்ளிகளில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நாள்தோறும் பள்ளிக்காக வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், எப்போதும் பரபரப்பாக காணப்படும் வாலாஜாபாத் பேருந்து நிறுத்தத்தில் காலை, மாலையும் போக்குவரத்து நெரிசல் என்பது தொடர் கதையாகவே உள்ளது. ஒருசில நேரங்களில் சாலையை கடக்க முயலும், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் விபத்துக்குள்ளாகும் சூழல் நாள்தோறும் நிலவுகின்றன. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘வாலாஜாபாதை சுற்றிலும் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள  நூற்றுக்கணக்கானோர் வாலாஜாபாத் பேருந்து நிறுத்தம் வந்துதான் இங்கிருந்து பல்வேறு நகர்ப்புற பகுதிகளுக்கு நாள்தோறும் சென்று வருகிறோம். இந்நிலையில் காலை, மாலையும் பேருந்து நிறுத்தம் அருகாமையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

இதனால், சிறு சிறு விபத்துகளில் இருந்து உயிரிழப்புகள் வரை நிலவுகிறது. இதனை சரி செய்ய காவல் துறை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் நாள்தோறும் காலை, மாலையும் பேருந்து நிறுத்தம் அருகாமையில் போக்குவரத்தை சீர் செய்ய போலீசார் நியமித்தால் பயனுள்ளதாக இருக்கும். மேலும், சாலையை கடக்கும் பாதசாரிகளுக்கு என சாலையில் முன்னெச்சரிக்கை பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் அமைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் இப்பகுதி சமூக ஆர்வலர்களும், கிராமமக்களும் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: