ஐதராபாத் பாலாப்பூர் விநாயகர் சதுர்த்தி விழா: 21 கிலோ எடை தங்க முலாம் பூசப்பட்ட லட்டு 24.60 லட்சம் ரூபாய்க்கு ஏலம்

திருமலை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் புகழ்பெற்ற பாலாப்பூர் விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின்போது அதிக எடையிலான லட்டு படைக்கப்படுவது வழக்கம். இதில் தூய நெய் மற்றும் உலர்ந்த சுத்தமான பழங்களால் செய்யப்பட்ட லட்டுவின் மேல் தங்க முலாம் பூசப்பட்டு, விநாயகர் முன்பு வெள்ளி கிண்ணத்தில் வைக்கப்பட்டு தினந்தோறும் பூஜைகள் செய்யப்படும். 10வது நாள் விநாயகர் சிலை விஜர்சனம் செய்வதற்கு முன்பு லட்டுவை பொதுவெளியில் ஏலம் விடுவார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஏலத்தில் பங்கேற்பவர்கள் ஒருபுறம் இருந்தாலும், லட்டு யாருக்கு கிடைக்கிறது என்பதை பார்ப்பதற்காகவே கூட்டம் கூடுகிறது. அந்த லட்டுவின் ஆரம்ப விலை நூற்றுக்கணக்கில் தொடங்கி பின்னர் லட்சக்கணக்கில் முடிவடைவது வழக்கம். அந்த வகையில் இன்று 21 கிலோ எடையிலான தங்க முலாம் பூசப்பட்ட லட்டு ஏலம் விடப்பட்டது. லட்டு ஏலம் ரூ.1,116ல் தொடங்கிய நிலையில் பி.லட்சுமா என்பவர் ₹24.60 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார். கடந்த ஆண்டு ₹18.90 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ₹5.70 லட்சம் கூடுதலாக ஏலம் போனது.

பாலாப்பூர் லட்டு ஏலம் முடிந்த பின்னர் விநாயகர் சதுர்த்தி அன்று அமைத்து வழிபட்ட விநாயகர் சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஐதராபாத் உசேன் சாகர் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் உள்ள ஏரியில் கிரேன் உதவியுடன் கரைக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக மிகவும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற விநாயகர் விஜர்சன ஊர்வலம் இந்த ஆண்டு மிகவும் கோலாகலமாக ஆடல் பாடல்களுடன் நடைபெற்றது.

Related Stories: