சேலத்தில் கேரள மக்கள் ஓணம் கொண்டாட்டம்-அத்தப்பூ கோலமிட்டு நடனமாடி அசத்தினர்

சேலம் : சேலத்தில் ஓணம் பண்டிகையை கேரளவாசிகள் புத்தாடை அணிந்து அத்தப்பூ கோலமிட்டு, ஆடிப்பாடி கொண்டாடினர்.கேரள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான திருவோணத்திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த ஒணம் பண்டிகையை கேரளாவில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் கேரள மக்கள், ஆங்காங்கே வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

சேலத்தில் வசிக்கும் கேரளா மக்கள் நேற்று, புத்தாடை அணிந்து ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். சேலம் தமிழ்ச்சங்கம் அருகே உள்ள கேரளா சமாஜத்தில் ஒன்று கூடிய கேரளா பெண்கள், வண்ண மலர்களை கொண்டு அத்தப்பூ கோலமிட்டனர். பின்னர், அத்தப்பூ கோலத்தின் நடுவில் தீபம் ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து, கோலத்தைச் சுற்றிலும் ஆடல் பாடலுடன் கும்மியடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கேரள சமாஜத்தின் தலைவர் ஜோசப், செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் சசிகுமார், மகளிர் பிரிவு தலைவர் சூசமா, செயலாளர் சொப்னா சுரேஷ், பொருளாளர் ரிங்கினா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில், அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

மேலும், சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில், ஓணம் பண்டிகையை பணியாளர்கள் உற்சாகமாக கொண்டாடினர். அலுவலக வளாகத்தில் அத்தப்பூ கோலமிட்டு, விளக்கேற்றி வழிபட்டனர். தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. திருவோணம் விருந்தும் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ், முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதேபோல், சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கேரள மக்கள் ஓணம் பண்டிகையை மிகவும் விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

Related Stories: