கோவையில் ஓணம் பண்டிகை கோலாகலம்-ஐயப்பன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

கோவை : கோவையில் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஐயப்பன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.கேரள மக்களின் பாரம்பரிய மிக்க விழாக்களில் ஓணம் பண்டிகை முதன்மை ஆனது. கேரளத்தை ஆண்ட மகாபலி சக்கரவர்த்தி அசுரகுல வேந்தர். இருப்பினும், தர்மத்தில் தலைசிறந்து விளங்கினார். யார் எதை கேட்டாலும் அதனை கொடுக்கும் தன்மை கொண்டவர். மகாபலி சக்கரவர்த்தி உலகை ஆள வேண்டும் என யாகம் நடத்தியபோது, அதை தடுக்க தேவர்கள் கிருஷ்ண பகவானிடம் வேண்டினர். இதனால், கிருஷ்ணர் வாமனன் அவதாரம் எடுத்து மகாபலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி நிலத்தை தானமாக கேட்டார்.

அப்போது, ஒரு அடியில் பூமியையும், மற்றொரு அடியில் விண்ணையும் பகவான் அளந்தார். மூன்றாவது அடிக்கு இடம் கேட்டபோது, மகாபலி சக்ரவர்த்தி தன் தலையில் பகவானின் மூன்றாவது அடியை வைத்துக்கொள்ள கூறினார். பின்னர், பகவான் மகாபலியின் தலையில் காலை வைத்து அவரை பாதாள உலகத்திற்கு அனுப்பியதாகவும், அப்போது, பகவானிடம் மகாபலி ஒரு வரம் கேட்டார், ”ஆண்டுதோறும் ஒருமுறை இதேநாளான திருவோணத்தின்போது பூமிக்கு வந்து மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்க வேண்டும்” என்றார். அந்த வரத்தை கிருஷ்ண பகவான் அவருக்கு அளித்ததாக புராணங்கள் கூறுகிறது.

இதனால், திருவோண தினத்தில் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் வகையில் கேரள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் அத்தப்பூ கோலமிட்டு, பாரம்பரிய உடை அணிந்து, மதியம் காய்கறி அவியல், இஞ்சி புளி, பச்சடி, பொரியல், சிப்ஸ், கூட்டு, சாப்பாடு, சாம்பார், ரசம், பப்படம் உள்பட 21 வகையான உணவுகளை தயாரித்து, இறைவனுக்கு படைத்து ஓணம் “சத்யா” எனப்படும் விருந்து அளிக்கப்படும்.இந்த ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.

கோவையில் உள்ள மலையாள மக்கள் அனைவரும் தங்களின் வீடுகளில் பூக்களினால் அலங்கரிக்கப்பட்ட அத்தப்பூ கோலமிட்டு, பாரம்பரிய உடையணிந்து, சத்யா விருந்து வைத்து கொண்டாடினர். மேலும், சித்தாபுத்தூர் ஐயப்பன் கோயில், சங்கனூர் ஐயப்பன் கோயில் உள்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடு நடந்தது.

 இதில் ஏராளமான பக்கர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories: