டெல்லியில் ரூ.477 கோடியில் புதுப்பிக்கப்பட்ட கடமை பாதையில் விதவிதமான வசதிகள்: 8 வணிக வளாகங்கள்; பரந்த புல்வெளிகள்; படகு சவாரி கல்வாய்கள்; 1,125 வாகனம் நிறுத்தலாம்; 400 பேர் அமரும் இருக்கைகள்

புதுடெல்லி: டெல்லியில் புதுப்பிக்கப்பட்டு ‘கடமை பாதை’ என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ராஜபாதையையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். டெல்லியில் குடியரசு தின விழாவின் போது பாரம்பரியமாக நடக்கும் ராணுவ அணிவகுப்புகள், ராஜபாதை, ஜனாதிபதி மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரை 3 கிமீ தூரம் நடக்கும். தற்போது புதிய நாடாளுமன்ற கட்டிடம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்டவை சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ராஜபாதையையும் புதுப்பித்து, ‘கடமை பாதை’ (கர்தவ்ய பாத்) என ஒன்றிய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. இந்த பாதையையும், இந்தியா கேட் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் முழு உருவச்சிலையையும் பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.

இது குறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ராஜபாதை, சென்ட்ரல் விஸ்டா திட்டப் பணிகளுக்கு அருகிலுள்ள பகுதிகள் சமீப ஆண்டுகளாக  பார்வையாளர்களின் அதிகரித்ததால் பொதுக் கழிப்பறை, குடிநீர், வாகன  நிறுத்துமிடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால், உள்கட்டமைப்பை  மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும், குடியரசு தின  அணிவகுப்பு மற்றும் பிற தேசிய நிகழ்வுகளை பொதுமக்கள் நடமாட்டத்திற்கு  குறைந்தபட்ச கட்டுப்பாடுகளுடன் ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் உணரப்பட்டது.  இந்த கவலைகளை மனதில் கொண்டே கடமை பாதை மறுவடிவமைப்பு  செய்யப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ரூ.477 கோடி செலவிடப்பட்டு உள்ளது.

புதிய வசதிகள் என்னென்ன?

* கடமை பாதையில் 5 வணிக மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் தலா 40 கடைகள் அமைக்கப்படுகின்றன.

* இந்தியா கேட் அருகே தலா 8 கடைகளுடன் 2 தொகுதிகள் உள்ளன. இங்கு சில  மாநிலங்கள் தங்கள் உணவுக் கடைகளை அமைக்க ஆர்வம் காட்டியுள்ளன.

* திருட்டு, கட்டமைப்புகள் சேதம் செய்யப்படுவதை தடுக்க, 24 மணி நேரரும் 80 போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

* மொத்தம் 19 ஏக்கர் கால்வாய் சீரமைக்கப்பட்டு, கிருஷி பவன் அருகில் உள்ள ஒரு கால்வாயிலும், வணிக பவனைச் சுற்றி உள்ள ஒரு கால்வாயிலும் படகு சவாரிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. 16 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* மக்கள் அதிகளவில் வருவதால், தூய்மை பணிக்காக அதிக துப்பரவு குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளன.  

* 15.5 கிமீ பரப்பளவில் புதிய சிவப்பு கிரானைட் நடைபாதைகள், 3.90 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு முற்றிலும் பசுமையான புல்வெளியாக மாற்றப்பட்டுள்ளது.

* 1,125 வாகனங்களும், இந்தியா கேட் அருகே 35 பேருந்துகளும் நிறுத்த பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

* 74 பழங்கால விளக்கு கம்பங்களும், 900 மின் கம்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் அமர்வதற்கு 400 இருக்கைகள், 150 குப்பை தொட்டிகள், 650க்கும் மேற்பட்ட புதிய பெயர் பலகைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

ராஜ்பாத்தின் வரலாறு

* ரைசினா ஹில் வளாகத்தில் இருந்து இந்தியா கேட் வரையிலான பாதைக்கு ‘கிங்ஸ் வே’ என்று பெயரிடப்பட்டு இருந்தது. இதை 1911ல் ஐந்தாம் மன்னர் ஜார்ஜ் அமைத்தார்.

* இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு, ‘கிங்ஸ் வே’ என்ற பெயர் ‘ராஜ்பாத்’ என மாற்றப்பட்டது. ‘குயின்ஸ் வே’ ‘ஜன்பத்’ என மாற்றப்பட்டது.

* இப்போது ​‘ராஜ்பாத்’ என்பது கடமை பாதை (கர்தவ்ய பாத்) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: