நீட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் 104, 1100 எண்களில் அழைத்தால் மனநல ஆலோசனை வழங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மார்க்கெட்டை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: நீட் தேர்வு எழுதியுள்ள  மாணவர்களுக்கு தொடர்ந்து மன  நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 564 பேர் அதிக மன உளைச்சலில் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களுக்கு மனநல மருத்துவர்கள் கொண்டு தொடர்ச்சியாக மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. High-risk மாணவர்கள் என்று சொல்லக்கூடிய இந்த 564 பேரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அதேபோல, தேர்வு  முடிவில் தேர்ச்சி பெறாத குழந்தைகள் யாரேனும் இருந்தால், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட மனநல ஆலோசகர் மூலம் ஆலோசனை வழங்கப்படும். ஆசிரியர்கள் தங்களுக்கு தெரிந்த மாணவர்களை 104, 1100 என்ற எண்கள் மூலம் தகவல் அளிக்க வேண்டும். மேலும், தேர்ச்சி பெறாத மாணவர்கள் அடுத்து என்ன செய்யலாம் என்ற ஆலோசனையும், மீண்டும் தேர்வு எழுத நடவடிக்கையும் எடுக்கப்படும். மருத்துவ கலந்தாய்வு விரைவில் நடைபெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். சித்தா பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான கடிதம் ஓரிரு நாட்களில் ஆளுநருக்கு அனுப்பப்படும். தமிழகத்தில் எதிர்காலத்தில் 32 மாவட்டங்களிலும் செவிலியர் பயிற்சி கல்லூரிகள் அமைப்பதற்கான கடிதத்தை ஒன்றிய அரசிடம் வழங்கி இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: