புழல் பகுதியில் தனியார் குடோனில் பதுக்கிய 55 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; கடத்தல்காரர்களுக்கு போலீஸ் வலை

புழல்: புழல் பகுதியில் தனியார் குடோனில் பதுக்கிய 55 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அரிசி கடத்திய கடத்தல்காரர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

புழல் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டிஜிபி ஆபாஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் டிஜிபி ஆபாஷ்குமார் உத்தரவின்பேரில், எஸ்பி கீதா, டிஎஸ்பி நாகராஜன் வழிகாட்டுதலில் ஆய்வாளர் சுந்தராம்பாள் தலைமையிலான குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ராம்நகர் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் ரேஷன் அரிசி மூட்டைகள் லாரியில் ஏற்றப்பட்டு ஆந்திராவிற்கு கடத்துவதற்கு தயாராக இருந்தது. மேலும் குடோன் முழுவதும் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆந்திராவிற்கு கடத்துவதற்காக பதுக்கிய 55 டன் ரேஷன் அரிசி மற்றும் 3 லாரிகளை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அரிசியை கடத்த முயன்ற ஜோஷ்வா மற்றும் கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

Related Stories: