எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க டெல்லி பயணம் ராகுல் காந்தியுடன் நிதிஷ்குமார் சந்திப்பு

புதுடெல்லி: பாஜவுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமார், அங்கு ராகுலை சந்தித்து பேசினார். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாஜ உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வராகி உள்ளார். இதைத் தொடர்ந்து, வரும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்கொள்ளும் வகையில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். இதற்காக நிதிஷ் குமார் நேற்று டெல்லி பயணம் மேற்கொண்டார்.முன்னதாக அவர் பாட்னாவில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவை சந்தித்து பேசினார். பின்னர் விமானம் மூலம் டெல்லி வந்த அவர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். இருவரும் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்களையும் நிதிஷ்குமார் சந்தித்து மெகா கூட்டணி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், பாட்னாவில் நிதிஷ்குமாரை சந்தித்து பேசினார். எனவே, நிதிஷ்குமாரின் டெல்லி பயணம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Related Stories: