ஆசிரியர்கள் பங்களிப்புடன் சரியான திசையில் நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ஆசிரியர்களின் பங்களிப்புடன் கல்வி முறையை வலுப்படுத்தும் சரியான திசையில் நாடு பயணிக்கிறது. அதன், தேசிய கல்விக் கொள்கை திட்டம் உலகளவில் பாராட்டப்படுகிறது,’’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஆசிரியர் தினத்தையொட்டி, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து தேசிய விருது பெற்ற 46 ஆசிரியர்களுடன் நேற்று கலந்துரையாடிய பிரதமர் மோடி பேசியதாவது: தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கியதில் நாட்டில் உள்ள அனைத்து ஆசிரியர்களின் பங்களிப்பும் முக்கியமானது. இந்த கொள்கை உலகளவில் பாராட்டப்படுகிறது. அமிர்த பெருவிழாவின் நூற்றாண்டின் போது, இந்தியா எந்த மாதிரி இருக்க வேண்டும் என்பதை ஆசிரியர்களே முடிவு செய்வார்கள்.

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிப்பவர் மட்டுமல்ல; அவர்களுடைய வாழ்க்கையை மாற்ற கூடியவர்கள். பதுங்கு குழியில் இருந்து கொண்டாலோ அல்லது தனிமைப்படுத்தி கொண்டாலோ வாழ்க்கை மாற்றம் அடையாது. வெற்றியை தரும் ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களையும் சமமாக நடத்துவார்; பாகுபாடு காட்ட மாட்டார்கள். ஒருங்கிணைந்த அணுகுமுறை ஆசிரியர்களுக்கு இன்றியமையாதது.மாணவர்கள் சவால்களை எதிர் கொள்ளவும் நேர்மறை எண்ணங்களை கொண்டிருக்கவும் ஆசிரியர் ஊக்குவிப்பார். உண்மையான ஆசிரியர் அடைய முடியாத இலக்கை மாணவர்கள் அடைய கனவு காண ஊக்குவிப்பார். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

*14,500 பள்ளிகள் மேம்படுத்தப்படும்

பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் இந்திய வளர்ச்சிக்கான பிரதமரின் பள்ளி யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 14,500 பள்ளிகள் மேம்படுத்தப்படும். இவை தேசியக் கல்விக் கொள்கையின் கீழ் மாதிரிப் பள்ளிகளாக செயல்படும். இப்பள்ளிகளில் நவீன மாற்றம் மற்றும் கண்டுபிடிப்பு சார்ந்த கற்றல் முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தற்கால தொழில்நுட்பம், ஸ்மார்ட் வகுப்பறைகள், விளையாட்டு மற்றும் நவீன உள்கட்டமைப்புகளிலும் கவனம் செலுத்தப்படும். தேசிய கல்விக் கொள்கை கல்வித் துறையை மாற்றியுள்ளது. இப்பள்ளிகள் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களுக்கு மேலும் பயனளிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

*வ.உ.சி. பிறந்தநாள் பிரதமர் புகழாரம்

நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரரும், ஆங்கிலேயரை எதிர்த்து கப்பலோட்டி தமிழன் என்று  அனைவராலும் அறியப்பட்டவருமான வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 151வது பிறந்த நாள் நேற்று கொண்டாப்பட்டது. இதனையொட்டி பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். சுதந்திர போராட்டத்தில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காக நமது நாடு என்றும் அவருக்கு கடமைப்பட்டு இருக்கின்றது. பொருளாதார முன்னேற்றம் மற்றும் நாடு தன்னிறைவு அடைவதற்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தார். அவரது லட்சியங்கள் தொடர்ந்து நம்மை ஊக்கப்படுத்தும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: