பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி பதிலடி; ரிஸ்வான்-நவாஸ் பார்ட்னர்ஷிப் திருப்புமுனை: பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மகிழ்ச்சி

துபாய்: 15வது ஆசிய கோப்பை டி.20 கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் நேற்று துபாயில் நடந்த 2வது போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோஹ்லி 44 பந்தில், 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 60 ரன் அடித்தார். ரோகித்சர்மா 28, கே.எல்.ராகுல் 28, தீபக்ஹூடா 16, பன்ட் 14, சூர்யகுமார் 13 ரன் அடித்தனர். பாகிஸ்தான் பவுலிங்கில் ஷதாப்கான் 2 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் 14, பகார்ஜமான் 15 ரன்னில் வெளியேற முகமது ரிஸ்வான் 51 பந்தில் 71, முகமது நவாஸ் 20 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 42 ரன் விளாசினர். 19.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன் எடுத்த பாகிஸ்தான், 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று லீக் சுற்றில் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துக்கொண்டது. 4 ஓவரில் 25 ரன் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தியதுடன் அதிரடியாக 42 ரன் விளாசிய நவாஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். ரவி பிஷ்னோய் வீசிய 18 ஓவரில், ஆசிப் அலியின் எளிதான கேட்சை அர்ஷ்தீப் சிங் கோட்டை விட்டதும், 19வது ஓவரில் புவனேஸ்வர்குமார் 19 ரன்களை வாரி வழங்கியதும் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறியதாவது: பவர்பிளேவில் இந்தியா ரன்களை குவித்தது. ஆனால் எங்கள் பந்துவீச்சாளர்கள் அதன்பின்னர் சிறப்பாக செயல்பட்டு கட்டுப்படுத்தினர். ரிஸ்வான் மற்றும் நவாஸ் கூட்டணி திருப்புமுனையாக அமைந்தது. லெக்ஸ் ஸ்பின்னர்களுக்கு எதிராக நவாஸ் சிறப்பாக ஆடுவார் என்பதால் தான் அவரை முன்னதாக களம் இறக்கினோம். அதுபலன் அளித்தது, என்றார். இன்று ஓய்வு நாளாகும். நாளை இந்தியா-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Related Stories: