சாலை தடுப்பின் மீது கார் மோதி விபத்து டாடா முன்னாள் தலைவர் மிஸ்த்ரி பலி: பிரதமர், முதல்வர் இரங்கல்

மும்பை: டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி, கார் விபத்தில் பலியானார். புகழ் பெற்ற டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக, கடந்த 2016ம் ஆண்டு வரையில் இருந்தவர் சைரஸ் மிஸ்த்ரி (54). குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து மும்பையை நோக்கி நேற்று இவர் காரில் சென்று கொண்டிருந்தார். மாலை 3.15 மணியளவில், பால்கர் மாவட்டத்தில் உள்ள சூர்யா நதி பாலத்தின் மீது வரும்போது கார் தனது கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மீது பயங்கரமாக மோதியது. இதில், கார் நொறுங்கியதில் சைரஸ் மிஸ்த்ரியும், பிரபல மருத்துவரின் உறவினரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

காரை ஓட்டிய பிரபல மருத்துவர் அனாஹித்தா பண்டோல், அவரது கணவர் டாரிஸ் பண்டோல் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் குஜராத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மிஸ்த்ரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக காசா ஊரக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து காசா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மிஸ்திரிக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். இவருடைய மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள்  தலைவர் ராகுல் காந்தி, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: