சீன லோன் ஆப் வழக்கு ரேசர்பே, பேடிஎம், கேஷ் ப்ரீ நிறுவனங்களில் அதிரடி ரெய்டு: ரூ.17 கோடி பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை

புதுடெல்லி: சீன லோன் ஆப் வழக்கில் 3 நிறுவனங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் வங்கி கணக்கில் இருந்த ரூ.17 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்திய செல்போன் சந்தைகளில் சீனா நிறுவனங்களான ரியல்மி, ஓபோ, விவோ போன்ற செல்போன்கள் அதிகளவில் விற்பனையாகின்றன. இந்நிலையில், சீன செல்போன் நிறுவனங்கள் நிதி மோசடியில் ஈடுபட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அபராதம் விதித்தது. இதைத் தொடர்ந்து, சீன செல்போன் நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒன்றிய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்நிலையில், சீனர்களால் செல்போன் மூலம் நடத்தப்படும் கடன் ஆப்கள்  தொடர்பான வழக்கில், ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செயலிகளான ரேசர்பே, பேடிஎம் மற்றும் கேஷ் ப்ரீ நிறுவனங்களில் அமலாக்கத்துறை நேற்று அதிரடியாக சோதனை நடத்தியது.

இது குறித்து அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மொபைல்போன் மூலம் சிறியளவில் கடன் பெற்ற பொதுமக்களை மிரட்டி பணம் பறித்தல், துன்புறுத்துவதில் சீன செல்போன் ஆப்கள் ஈடுபட்டது தொடர்பாக, பல்வேறு நிறுவனங்கள் மீது 18  வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரேசர்பே, பேடிஎம், கேஷ் ப்ரீ போன்ற பணப் பரிவர்த்தனை ஆப்கள், இந்தியர்களின் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, அவர்களை போலி இயக்குநர்களாக சேர்த்து குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் சீன நபர்களால் இயக்கப்படுகின்றன.

இந்த நிறுவனங்கள் தங்கள் சட்ட விரோத வணிகத்தை பல்வேறு  வணிகர் ஐடிகள், பேமெண்ட் கேட்வே, வங்கிகளில் வைத்திருக்கும் கணக்குகள்  மூலம் செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் போலி முகவரியில் செயல்பட்டு வந்துள்ளன. இந்நிலையில்,  ரேசர்பே, பேடிஎம், கேஷ் ப்ரீ போன்ற நிறுவனங்களுக்கு சொந்தமான பெங்களூருவில் உள்ள 6 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி உள்ளது. இதில், வணிகர் ஐடிகள் மற்றும் சீன நபர்களின் வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.17 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: