மூதாட்டி கழுத்தில் கிடந்த நகையை தங்கம் என நினைத்து கவரிங் செயினை பறித்த பைக் திருடன்-மடக்கி பிடித்த தென்மலை போலீஸ்

செங்கோட்டை : மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 350 ரூபாய் கவரிங் செயினை தங்க நகை என்று நினைத்து அறுத்துக் கொண்டு பைக்கில் வேகமாக சென்ற திருடனை தென்மலை போலீசார் மடக்கி பிடித்தனர்.ஆரியங்காவு அருகே உள்ள உருகுன்னு பகுதியில் அத்திக்கத்தரை வீட்டை சேர்ந்தவர் விஜயம்மா (60). இவர் நேற்று காலை தனது வீட்டு முற்றத்தில் கட்டியிருந்த ஆட்டுக்குட்டிக்கு தண்ணீர் வைத்து கொண்டிருந்தார்.

அப்போது கொல்லம்- திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வந்த வாலிபர் புஷ்பவல்லி வீடு எங்குள்ளது என விஜயம்மாவிடம் முகவரி கேட்பதுபோல் விசாரித்தார். அப்போது அந்த பெயரில் இங்கு யாரும் இல்லை என்று அவர் கூறிக்கொண்டிருந்த போது திடீரென அந்த இளைஞர், விஜயம்மாவின் கழுத்தில் கிடந்த ரூ.350 மதிப்பிலான கவரிங் செயினை தங்கம் என நினைத்துக்கொண்டு அறுத்து விட்டு வேகமாக பைக்கில் தப்பி சென்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த விஜயம்மா திருடன், திருடன் எனக் கூக்குரலிட்டார்.

இதனைத் தொடர்ந்து அவரது சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் பைக் பதிவு எண்ணை குறித்து கொண்டு தென்மலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தென்மலை போலீசார் பைக்கை  விரட்டி சென்று ஆரியங்காவில் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர், நாகர்கோவிலை சேர்ந்த  மணி (25)  என்பது தெரிய வந்தது.  இவர் மீது ஏற்கனவே இதுபோல திருட்டு வழக்குகள் பல உள்ளதாக ஆரியங்காவு போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: