ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ் பேரிடர் மேலாண்மை பயிற்சி

காஞ்சிபுரம்: தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் ஆப்த மித்ரா (ஆபத்து கால நண்பன்) திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 400 தன்னார்வலர்களுக்கு 12 நாட்கள் பேரிடர் மேலாண்மை பயிற்சியினை வழங்க திட்டமிடப்பட்டு அவர்களுக்கு நிலச்சரிவு, வெள்ளம், சுனாமி, இடி மற்றும் மின்னல் அடிப்படை தேடல் மற்றும் மீட்பு போன்ற 26 தலைப்புகளில் பேரிடர் காலத்தில் உடனடியாக சென்று பொதுமக்களை உரிய முறையில் மீட்கும் வகையில் அவர்களை தயார் செய்யும் பொருட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, ஊரக சுகாதார துறை, மாநில பேரிடர் மீட்பு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த பயிற்சியாளர்கள் இணைந்து ஆப்த மித்ரா தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கி வருகின்றனர்.

இந்த பயிற்சிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24.8.2022 முதல் காஞ்சிபுரம் வட்டத்தில் பல்லவன் பொறியியல் கல்லூரி, திம்மசமுத்திரம் தொடங்கப்பட்டது. குன்றத்தூர் வட்டத்தில் மாதா பொறியியல் கல்லூரி, காவனூர், திருப்பெரும்புதூர் வட்டத்தில் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, பென்னலூர் ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உத்திரமேரூர் வட்டத்தில் 12.9.2022 வரை மீனாட்சியம்மாள் கல்வியியல் கல்லூரியில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். மேற்படி, பயிற்சி முடிவில் பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை, சான்றிதழ் மற்றும் அடிப்படை மீட்பு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. மேற்படி பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருப்பார்கள் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

Related Stories: