வாக்காளர் அட்டை- ஆதார் இணைப்பு; வரும் 4ம் தேதி சிறப்பு முகாம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் கடந்த 1.8.2022 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில் சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் 4.9.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. எனவே, இந்தச் சிறப்பு முகாமினை பயன்படுத்தி வாக்காளர் பொதுமக்கள் அனைவரும் தாமாக முன்வந்து வாக்குச்சாவடி நிலை அலுவலரை அணுகி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அடையாள அட்டை எண்ணை இணைத்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், ஏற்கனவே இணையதளம் மூலமாகவோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வந்தபோது படிவம் 6பி, வாக்காளர் அடையாள அட்டை,  ஆதார் அடையாள அட்டை எண் மற்றும் கைபேசி விவரங்களை வழங்கியவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ள தேவையில்லை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: