சட்டவிரோத பண பரிவர்த்தனை ஜிவி பிலிம்சின் ரூ.8.94 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

சென்னை: சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்ட ஜிவி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.8.94 கோடி மதிப்பிலான திரையங்கத்தை அமலாக்கத் துறையினர் நேற்று முடக்கினர். சென்னை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஜிவி பிலிம்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தமிழ் படங்களை விநியோகம் செய்து வருகின்றனர். இந்நிறுவனம் சர்வதேச வைப்பு ரசீது மூலம் கிடைத்த வருவாய் முலம், போர்ச்சுகலில் உள்ள பேங்கோ எபிஷா என்ற வங்கியில் கணக்கு தொடங்கி பல்வேறு சட்டவிரோத பண பரிவத்தனையில் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள ஜிவி பிலிம்ஸ் நிறுவனத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு  முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இங்கிலாந்தில் உள்ள ஒயிட்வியூ டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்துடன் ஜிவி பிலிம்ஸ் நிறுவனம் சேர்ந்து, அந்த நிறுவனத்தை  பேங்கோ எபிஷா வங்கியில் கடனை பெற வைத்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதும், அதன் மூலம் கிடைத்த வருவாய் ரூ.172.8 கோடியை சட்டவிரோதமாக இந்தியாவிற்கு கொண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து,  தஞ்சாவூரில் உள்ள அந்நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.8.94 போடி மதிப்பிலான திரையரங்கத்தை அமலாக்கத்துறையினர் நேற்று முடக்கினர். மேலும், வேறு இடங்களில் சட்ட விரோத பண பரிவர்த்தனை மூலம் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: