பாகிஸ்தானை புரட்டிப் போட்ட வெள்ளம் சிந்து மாகாண புராதன சின்னங்கள் சேதம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக பெய்து வரும் கன மழையால், பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மூன்று லட்சம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சிந்து, பலுசிஸ்தான், பஞ்சாப் மாகாணங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள புராதன சின்னங்கள் வெள்ளத்தில் சேதமடைந்து அழிந்து விட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கும் அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில், ‘சிந்துவில் உள்ள 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மொகஞ்சதாரோ வரலாற்று தலத்தில் உள்ள ‘இறந்தவர்களின் குன்று’, லர்கானாவில் உள்ள ஷா பகாரோ தஜ்ஜார் புராதன கட்டிடங்கள், மொரோவில் உள்ள மியான் நூர் முகமது கல்கரோ கல்லறை உள்ளிட்ட 6 கல்லறைகள், ராணிக்கோட்டை மதில், ஷாகி மகால், வெள்ளை மாளிகை, பய்ஸ் மகால், துல் மிர் ருகானில் உள்ள புத்த ஸ்தூபி உள்ளிட்ட புராதன சின்னங்கள் சேதமடைந்து அழிந்து விட்டது,’ என கூறப்பட்டுள்ளது.

* 100 கிமீ.க்கு திடீர் ஏரி

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை அமெரிக்காவின் ‘மோடிஸ்’ என்ற செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்துள்ளது. அதில், மழைக்கு முன்பு விளை நிலங்களாக இருந்த பகுதி, 100 கிமீ நீளமுள்ள மிகப்பெரிய ஏரியாக மாறியுள்ளது. இந்த புகைப்படம் கடந்த மாதம் 28ம் தேதி எடுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே நாளில், இந்த செயற்கைக்கோள் எடுத்த புகைப்படத்தில் இந்த பகுதி ஆறு, கால்வாய்கள் என சீராக உள்ளது. 

Related Stories: