மீட்கப்பட்ட பணிப்பெண்ணின் அவலநிலை உடல் முழுவதும் காயங்கள் பற்களை உடைத்து சித்ரவதை: கொடுமைப்படுத்திய பாஜ மகளிரணி தலைவி கைது

ராஞ்சி: பாஜ மகளிரணி நிர்வாகி சீமா பத்ராவின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பழங்குடியின பணிப்பெண்ணுக்கு உடல் முழுவதும் காயங்கள் இருப்பதாகவும், அவரின் பல பற்கள் உடைக்கப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பாஜ மகளிரணி நிர்வாகி சீமா பத்ரா. இவரது கணவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி. பத்ரா வீட்டில், 29 வயதான பழங்குடியின பெண் சுனிதா என்பவர் கடந்த 10 ஆண்டாக வேலை செய்து வந்தார். அவரை பத்ரா கடந்த 8 ஆண்டாக அறையில் பூட்டி வைத்து மனிதாபிமானம் இல்லாமல் சித்ரவதை செய்துள்ளார்.

சிறுநீரை குடிக்க வைத்தும், இரும்பு ராடால் அடித்தும் கொடுமைபடுத்தி உள்ளார். பத்ரா மகனின் நண்பர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் ராஞ்சி அர்கோரா போலீசார், பத்ரா வீட்டிலிருந்து சுனிதாவை மீட்டுள்ளனர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சுனிதாவின் உடல் நிலை குறித்து போலீசார் கூறுகையில், ‘அவரது உடல் முழுவதும் காயங்கள் உள்ளன. பல பற்கள் அடித்து உடைக்கப்பட்டுள்ளன. உடலில் பல இடங்களில் தீக்காயங்களும் உள்ளது. சுனிதா மிக கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது,’ என்றனர். இதற்கிடையே, பணிப்பெண்ணை கொடுமைபடுத்திய சீமா பத்ராவை பாஜ கட்சி சஸ்பெண்ட் செய்துள்ளது. சுனிதா புகாரின் பேரில் ராஞ்சி போலீசார் நேற்று அதிகாலை சீமா பத்ராவை கைது செய்துள்ளனர்.

Related Stories: