பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொள்ளும் போது ஆதார், பான் வைத்து வயதை உறுதிப்படுத்த அவசியமில்லை; மைனர் பெண் பலாத்கார வழக்கில் டெல்லி ஐகோர்ட் உத்தரவு

புதுடெல்லி:  டெல்லியில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமி ஒருவரை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜஸ்மீத் சிங் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இளைஞர் தரப்பில், ‘‘சிறுமியும், இளைஞரும் பரஸ்பர சம்மதத்துடனே உறவு கொண்டுள்ளனர். ஆனால், அந்த சிறுமி 18 வயதுக்கு குறைவானர் என்பதால் பலாத்கார வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிறுமிக்கு அதிகாரப்பூர் ஆவணங்களின்படி 3 வெவ்வேறு பிறந்த தேதிகள் உள்ளன. போக்சோ உள்ளிட்ட சட்டங்களை பயன்படுத்தவே பிறந்த தேதியை மாற்றி உள்ளனர்’’ என வாதாடப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி அளித்த தீர்ப்பு: ஒரு ஆணும், பெண்ணும் பரஸ்பர சம்மதத்துடன் உடல் உறவில் ஈடுபடும் போது உறவில் ஈடுபடும்போது ஆதார் அட்டை, பான் கார்டைப் பார்க்கவோ அல்லது அவரது பள்ளிப் பதிவுகளில் இருந்து பிறந்த தேதியைச் சரிபார்க்கவோ தேவையில்லை.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, பெண்ணின் ஆதார் அட்டையில் பிறந்த தேதி 1.1.1998 என்றே இருக்கிறது. இதுவே குற்றஞ்சாட்டப்பட்டவர் மைனருடன் உடல் உறவில் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்கிறது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் இருந்து பெரும் தொகை பெறப்பட்டுள்ளது. எனவே இது பணம் பறிக்கும் தந்திரமாகவும் பார்க்கப்படுகிறது. அந்த பெண் கொடுத்த புகாரில் அவர் 2019ல் அந்த நபருடன் உறவில் இருந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், இத்தனை காலத்துக்குப் பின்னர் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்த பெண் வேறு யாராவது மீது இதேபோன்ற புகாரை அளித்துள்ளாரா என டெல்லி போலீசார் ஆய்வு செய்ய வேண்டும். அந்த பெண்ணின் ஆதார் கார்டு குறித்தும் அதில் இருக்கும் தகவல்கள் குறித்தும் டெல்லி போலீசார் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு, குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Related Stories: