இன்ஸ்டாகிராமில் பழகிய சென்னை நண்பரை பார்க்க வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவிகள்: அரக்கோணம் ரயில் நிலையத்தில் போலீசார் மீட்டனர்

நெமிலி: இன்ஸ்டாகிராமில் பழகிய சென்னையை சேர்ந்த நண்பரை பார்க்க, பள்ளி மாணவிகள் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த மாணவிகளை அரக்கோணம் ரயில் நிலையத்தில் போலீசார் மீட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த அக்காள், தங்கை. இவர்கள் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 மற்றும் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள், கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் படிப்பதற்காக பெற்றோர் வாங்கி கொடுத்த ஆன்ட்ராய்டு செல்போனை பயன்படுத்தி வந்தனர்.செல்போனில் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் வீடியோக்கள், படங்கள் பார்த்துள்ளனர்.

அப்போது, சென்னையை சேர்ந்த 15 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவருடன் சாட் செய்துள்ளனர். அப்போது, அவர் சென்னையை பற்றி அழகாகக்கூறி சுற்றிப்பார்க்க வரும்படி கூறினாராம். ஏற்கனவே, சென்னையை பார்க்க ஆவலில் இருந்த அக்கா, தங்கை இருவரும், சென்னைக்கு செல்ல ஆசைப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 28ம் தேதி பள்ளிக்கு விடுமுறை என்பதால் வீட்டில் யாரிடமும் கூறாமல் அக்கா, தங்கை இருவரும் ரயிலில் சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். பின்னர், அங்கு ‘இன்ஸ்டாகிராமில்’ வாலிபரை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், எவ்வித தகவலும் கிடைக்கவில்லையாம். இதனால் இரவு முழுவதும் சென்னையில் காத்திருந்தனர்.

இதற்கிடையில், மகள்கள் மாயமானது குறித்து பெற்றோர் நெமிலி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து மாயமான மாணவிகளை பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் தேடினர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நெமிலி போலீசார் அரக்கோணம் ரயில் நிலையத்தில் மாணவிகளை தேடினர். அப்போது, சென்னையில் இருந்து அரக்கோணம் வந்த ஒரு ரயிலில் அக்கா, தங்ைக இருவரும் இறங்கியதை கண்டனர். உடனே அவர்களை மீட்டு நெமிலி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அக்கா, தங்கை இருவரும் சென்னைக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பியது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை நேற்று ராணிப்பேட்டை இளம் சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: