ஆகாயத் தாமரைகள் படர்ந்த வண்ணான் குளம்; பயன்பாட்டுக்கு வருமா?

ஆவடி: அயப்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் ஏற்கெனவே குடிநீர் பயன்பாட்டில் இருந்து வந்த வண்ணான்குளம், தற்போது பராமரிப்பின்றி ஆகாயத் தாமரைகள் படர்ந்து, கடும் துர்நாற்றம் வீசியபடி பாழடைந்து கிடக்கிறது. இக்குளத்தை சீரமைத்து மீண்டும் குடிநீர் பயன்பாட்டுக்கு கொண்டுவர அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். சென்னை வில்லிவாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அயப்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, வண்ணான் குளம் இருந்தது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இந்த வண்ணான் குளத்தை சுற்றிலும் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹7 லட்சம் மதிப்பீட்டில் நடைபாதையுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டது. எனினும், அப்பூங்கா கடைசிவரை என்ன காரணத்தினாலோ மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல், முறையான பராமரிப்பின்றி வண்ணான்குளத்தை சுற்றிலும் ஆகாயத்தாமரைகள் படர்ந்து, கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், இக்குளத்தை சுற்றியுள்ள நடைபாதை மற்றும் பொழுதுபோக்கு பூங்கா முற்றிலும் சேதமாகிவிட்டன.

இதனால் அங்கு நடைபயிற்சி மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, வண்ணான்குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றி, அந்நீரை தூர்வாரி சீரமைத்து தூய்மைப்படுத்தவும், அந்த பொழுதுபோக்கு பூங்கா மற்றும் நடைபாதையை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: