இளைஞர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வு அறிவிப்பாணைகளை வெளியிட வேண்டும்: டிஎன்பிஎஸ்சிக்கு ஓ.எஸ்.மணியன் அறிக்கை

சென்னை: இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வு அறிவிப்பாணைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட வேண்டும் என அதிமுக நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 1089 சர்வேயர் பணியிடங்களுக்கான விளம்பரம் வெளியிட்டது. அந்த விளம்பரத்தில் கல்வித் தகுதியாக இந்திய அரசின் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழை பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பயின்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்களாக ஆகியுள்ளனர். எனவே விண்ணப்பிக்கும் கால அளவை நீட்டிப்பு செய்தும், தமிழக அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயின்று சான்றிதழ் பெற்ற அனைத்து தமிழக மாணவர்களையும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களாக திருத்தம் செய்தும் புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும். லட்சக்கணக்கான தமிழக மாணவர்கள் அரசு வேலைக்காக ஏங்கித் தவிக்கின்ற இன்றைய காலச் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இனிவரும் காலங்களில் தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வு அறிவிப்பாணைகளை வெளியிட வேண்டும்.

Related Stories: