எழுந்து நின்று பேசமாட்டீயா? ஊழியரை கன்னத்தில் அறைந்த மின் வாரிய கண்காணிப்பாளர்; 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சென்னை: எழுந்து நின்று பேசமாட்டீயா என ஊழியரை கன்னத்தில் அறைந்த மின் வாரிய கண்காணிப்பாளர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சேப்பாக்கம் பெல்ஸ் சாலையில் உள்ள மின்வாரிய உதவி பொரியாளர் அலுவலகத்தில் சிறப்பு நிலை முகவராக பணியாற்றி வருபவர் பாபு (55). இவர் வழக்கம் போல் உதவி பொறியாளர் அலுவலகத்தில் நேற்று பணியில் இருந்தார். அப்போது அண்ணாசாலை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றும் நாராயணசாமி (42), அந்த அலுவலகத்திற்கு வந்தார்.

தன்னை யார் என்று அறிமுகம் செய்யாமல் ‘எனக்கு தனியாக மீட்டர் இணைப்பு கேட்டிருந்தேன் கொடுத்தாயா, இல்லையா என தகாத வார்த்தைகளில் பேசியதாக கூறப்படுகிறது. அதோடு இல்லாமல உனக்கு என்னடா டேபுள் சேர், நீ என்ன உட்கார்ந்து கொண்டு என்னிடம் பேசுகிறாய், எழுந்து நில்லுடா நாயே என்று கூறி இடது கன்னத்தில் அறைந்தததாக கூறப்படுகிறது. என்ன என்று தெரியாமல் ஒருவர் தன்னை அடித்து விட்டு செல்கிறார் என உதவி பொறியாளர் வசந்தகுமாரியிடம், பாபு புகார் அளித்துள்ளார்.

விசாரணையில், அவரை கன்னத்தில் அறைந்தது தலைமை மின் வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் மின்வாரிய கண்காணிப்பாளர் நாராயணசாமி என தெரியவந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் மின்வாரிய கண்காணிப்பாளர் நாராயணசாமி மீது ஐபிசி 294 (பி), 323 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: