உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்பு: 74 நாட்கள் மட்டுமே பதவி வகிப்பார்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நேற்று பதவியேற்று கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணாவின் பதவி காலம் நேற்று முன்தினத்துடன் முடிந்தது. இதைத் தொடர்ந்து, மூத்த நீதிபதியான யு.யு.லலித், உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்டார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று காலை நடந்த பதவியேற்பு விழாவில், யு.யு.லலித்துக்கு  ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதிய தலைமை நீதிபதி யு.யு.லலித், மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் 1957ம் ஆண்டு பிறந்தவர். 1983ல் வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கினார். 1985ம் ஆண்டு வரை மும்பை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றினார். 1986 ஜனவரியில் டெல்லிக்கு இடம் பெயர்ந்தார். 2004ல் மூத்த வழக்கறிஞராக உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, செயல்பட்டு வந்தார். இவர் வரும் நவம்பர் 8ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். எனவே, 74 நாட்களுக்கு மட்டுமே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இவர் பணியாற்றுவார். இதற்கு முன்பும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற 5 பேரின் பதவிக்காலம் 100 நாட்களுக்குள் முடிந்து, ஓய்வு பெற்றுள்ளனர்.

Related Stories: