பாகிஸ்தானை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம்; இந்திய துணை கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டி

துபாய்: 15வது ஆசிய கோப்பை டி.20 தொடர் துபாயில் இன்று தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் இடம்பிடித்துள்ளது. இந்திய அணி தனது முதல் போட்டியில் நாளை துபாயில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பயிற்சிக்கு இடையே இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் அளித்த பேட்டி: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். ஏனெனில் இந்த பெரிய போட்டிகளைத் தவிர வேறு எங்கும் நாங்கள் ஒருவருக்கொருவர் விளையாடுவதில்லை. எனவே, பாகிஸ்தான் போன்ற ஒரு அணிக்கு எதிராகப் போட்டியிடுவது நம் அனைவருக்கும் ஒரு உற்சாகமான நேரம், பெரும் சவாலாகும், என்றார். தொடர்ந்து நிருபர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்கள்:

இந்தியாவின் ஆக்ரோஷமான அணுகுமுறை குறித்து?

கடந்த உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணியின் புதிய அணுகுமுறையைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, கேப்டன் சொன்னதை அனைவரும் பின்பற்றி, இதைத் தொடர நாங்கள் விரும்புகிறோம்.

விராட் கோஹ்லியின் ஃபார்ம்?

கோஹ்லி மீண்டும் ஃபார்முக்கு வர வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம், அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. இந்தியாவுக்காக போட்டிகளை வெல்வதற்காக அவரது மனநிலை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும், அவர் பல ஆண்டுகளாக அதைச் செய்து வருகிறார். அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர். அவர் பசியுடன்(ரன்) இருக்கிறார் மற்றும் நாட்டிற்காக போட்டிகளில் வெற்றி பெற விரும்புகிறார். கருத்துக்களுக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இது உண்மையில் ஒரு வீரரை பாதிக்காது. குறிப்பாக விராட் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர் வெளியில் சொல்வதால் பாதிக்கப்பட மாட்டார். அவருக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தது. அவர் தனது விளையாட்டில் கவனம் செலுத்துகிறார். நான் காயமடைந்து 2 மாதங்கள் வீட்டில் இருந்தபோது, ​​​​நான் அவரை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் பார்ம் இல்லாமல் இருப்பதைப் போல உணரவில்லை.

ஷாகின் ஷா அப்ரிடி இல்லாதது குறித்து?

அப்ரிடி ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். அவர் விளையாடியிருந்தால் அது எங்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்திருக்கும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர் காயமடைந்து பங்கேற்கவில்லை என்றார். தொடர்ந்து அவர் கூறியதாவது: இங்கு டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். டி.20 உலக கோப்பைக்கு பிறகு நாங்கள் ஆடிய போட்டிகளை பார்த்தால் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து எதிரணிக்கு சவால் விட்டோம். எனவே டாஸ் வென்று பேட்டிங் செய்தால் எங்களால் சிறந்ததை கொடுப்போம் என்பது எப்போதும் மனதில் இருக்கும். ஒவ்வொரு அணியும் உலகக் கோப்பை போன்ற ஒரு நிகழ்வை வெற்றியுடன் தொடங்க விரும்புகிறது. துரதிர்ஷ்டவசமாக, கடந்த ஆண்டு எங்களுக்கு அது நடக்கவில்லை. வலுவான பாகிஸ்தான் அணியால் நாங்கள் வீழ்த்தப்பட்டோம். எனவே, இது எங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு.  இது எங்களுக்கு ஒரு போட்டி. அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். என்னைப் பொறுத்தவரை, காயத்திற்குப் பிறகு ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மிகவும் முக்கியமானது. நான் எவ்வளவு மீண்டு வந்தேன் என்பதைப் புரிந்துகொள்ள இந்தத் தொடர் எனக்கு உதவியது. நான் இந்த போட்டியில் இன்னும் கொஞ்சம் நம்பிக்கையுடன் நுழைகிறேன், என்றார்.

Related Stories: