சுதந்திர தின கொண்டாட்டத்தில் சோகம் உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 25 பேர் பரிதாப பலி; 50 பேர் காயம்

கீவ்: உக்ரைனில் நேற்று முன்தினம் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில், அங்குள்ள ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 25 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ம் தேதி போர் தொடுத்தது. நேற்று முன்தினத்துடன் 6 மாதங்கள் முடிந்த நிலையிலும், போர் நீடித்து கொண்டிருக்கிறது. இதில், உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் தனது சுதந்திர தினத்தை நேற்று முன்தினம் கொண்டாடியது. இதை சீர்குலைக்க ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கும்படி மக்களுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், அவர் கணித்தது போலவே கிழக்கு உக்ரைனில் உள்ள சாப்ளின் நகர் ரயில் நிலையம் மீது ரஷ்ய ராணுவம் நேற்று அதிகாலை ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், ரயில் ஒன்று தீப்பற்றி எரிந்தது. இந்த தாக்குதலில் ரயிலிலும், ரயில் நிலையத்திலும் இருந்த 25 அப்பாவி மக்கள் பலியாகினர்.  50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.  4 ரயில் பெட்டிகள் முழுமையாக எரிந்துள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பொதுமக்களை கொல்லும் ரஷ்யாவின் இந்த செயலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதமும்  இதேபோல் உக்ரைன் ரயில் நிலையம் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில்  50க்கும் மேற்பட்ட பயணிகள் பலியாகினர்.

* முதல்முறை ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா வாக்களிப்பு

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர், 6 மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதனால், அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இது தொடர்பாக, ரஷ்யாவுக்கு எதிராக ஐநா.வில் நடத்தப்பட்ட பல்வேறு வாக்கெடுப்புகளில் இந்தியா ஒருமுறை கூட பங்கேற்கவில்லை. ரஷ்யாவுக்கு ஆதரவாக இதை செய்தது. இந்நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை காணொலி மூலமாக பேச அனுமதிப்பது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட்டது. இதில், தற்காலிக உறுப்பினராக உள்ள இந்தியா உட்பட 15 நாடுகள் வாக்களிக்க வேண்டும். இதில், ஜெலன்ஸ்கியின் உரையை ஆதரித்து இந்தியா வாக்களித்தது. இதன்மூலம், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா முதல்முறையாக வாக்களித்து உள்ளது. ரஷ்யாவும், சீனாவும் எதிர்த்து வாக்களித்தன.

Related Stories: