பிரம்மோஸ் ஏவுகணை சர்ச்சை நடவடிக்கை போதாது பாகிஸ்தான் அதிருப்தி: கூட்டு விசாரணைக்கு வலியுறுத்தல்

இஸ்லாமாபாத்: ‘பிரம்மோஸ் ஏவுகணை விவகாரத்தில் 3 ராணுவ அதிகாரிகளை இந்தியா பதவி நீக்கம் செய்த நடவடிக்கை போதுமானதாக இல்லை,’ என்று பாகிஸ்தான் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்தியாவின் சூப்பர்சோனிக் ஏவுகணையான பிரம்மோஸ், கடந்த மார்ச் மாதம் தவறுதலாக பாகிஸ்தானுக்குள்  பாய்ந்து சென்று விழுந்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தவறுதலாக இது நடந்து விட்டதாக இந்தியா விளக்கம் அளித்தது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், விமானப்படை அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த தவறு நடந்ததாக உறுதியானது. இதையடுத்து, 3 அதிகாரிகள் நேற்று முன்தினம் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எதிர்பார்த்தது போல், இச்சம்பவம் தொடர்பாக இந்தியா எடுத்திருக்கும் நடவடிக்கை முற்றிலும் அதிருப்தி அளிக்க கூடியதாக உள்ளது. இதில் குறைகள் உள்ளன; இந்த நடவடிக்கை போதுமானதாக இல்லை. இந்தியாவின் நீதிமன்ற விசாரணையை பாகிஸ்தான் நிராகரிக்கிறது. நடந்த சம்பவம் தொடர்பாக கூட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்கு உரிய பதில் தராமல் இந்தியா மழுப்புகிறது. மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றால், வெளிப்படையான கூட்டு விசாரணையை அது ஏற்க வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: