உயிரிழந்த கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாய் சனிக்கிழமை முதல்வரை தலைமை செயலகத்தில் சந்திக்க திட்டம்

சென்னை: உயிரிழந்த கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாய் சனிக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, தனியார் பள்ளி, பேருந்துகளை சிலர் சேதப்படுத்தினர். இது சம்பந்தமான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இறந்த மாணவி ஸ்ரீமதியின் இரண்டு உடற்கூறாய்வு முடிவுகள் வீடியோ பதிவுகளுடன் புதுவை ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த ஆய்வு அறிக்கையை ஆய்வு செய்த ஜிப்மர் மருத்துவ குழுவினர், தங்கள் ஆய்வறிக்கையை விழுப்புரம் நீதிமன்றத்தில் இரண்டு நாட்களுக்கு முன் சமர்ப்பித்தனர். அதேபோன்று, உயிரிழந்த மாணவியின் தோழிகள் இரண்டு பேர் நீதிபதி முன்னிலையில் ரகசிய வாக்குமூலமும் அளித்துள்ளனர். இந்த நிலையில், ஸ்ரீமதியின் தாயார் செல்வி, என்னுடைய மகளின் தோழிகள் இரண்டு பேரை போலீசார் விசாரித்ததாகவும், வாக்குமூலம் அளித்ததாகவும் செய்திகள் வருகிறது. உண்மையில் அவர்கள் எனது மகளின் தோழிகள் தானா? அவர்கள் பெயர் என்ன? பள்ளி நிர்வாகத்தால் அனுப்பப்பட்டார்களா? என்று எங்களுக்கு எதுவுமே தெரியாது.

அவர்களை பற்றி எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். சிபிசிஐடி போலீசார் உண்மையை நிலைநாட்டுவார்கள் என்று நாங்களும் நம்புகிறோம். விசாரணை விரைவில் முடிக்க வேண்டும். எனது மகளுக்கு நீதி கேட்டு முதல்வரிடம் மனு கொடுக்க வேண்டும் என பல வகையிலும் முயன்றோம். வரும் வெள்ளிக்கிழமை என்னுடைய மகளுக்கு நீதி கேட்டு சொந்த ஊரான பெரிய நெசலூரில் இருந்து நடைபயணமாக சென்று தமிழக முதல்வரிடம் மனு கொடுக்கலாம் என இருக்கிறோம் என்றார். அதன்படி மாணவி ஸ்ரீமதி தாயார் வருகிற சனிக்கிழமை (27ம் தேதி) சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

Related Stories: