நாகர்கோவிலில் அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் தொடக்கம்

நாகர்கோவில் : நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் நள்ளிரவில் தொடங்கியது. நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் அருகே அண்ணா விளையாட்டு அரங்கத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கான ஆட்கள் தேர்வு நேற்று நள்ளிரவு 12.01க்கு தொடங்கியது. செப்டம்பர் 1ம் தேதி அதிகாலை வரை முகாம் நடைபெற இருக்கிறது. திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர். தினமும் 3 ஆயிரம் பேர் வீதம் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதன்படி நேற்று இரவில் இருந்து இளைஞர்கள் குவிந்தனர். கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இருந்து பெருமளவில் இளைஞர்கள் திரண்டு இருந்தனர்.

இதற்காக அண்ணா விளையாட்டு அரங்கில் இரவை பகலாக்கும் வகையில் 300க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. பெயர் பதிவு, உயரம் சரிபார்த்தல், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்டவை தனித்தனியாக நடந்தன. பின்னர் ஸ்டேடியத்துக்கு அனுமதிக்கப்பட்டு  1500 மீட்டர் ஓடினர்.

முகாமுக்கு வரும் இளைஞர்கள் அசல் கல்விச் சான்று (8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு) மற்றும் அதன் நகல் கொண்டு வரவும். மேலும் ஜூலை 2022-ல் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளபடி குறிப்பிட்ட படிவத்தில் தயார் செய்யப்பட்ட உறுதிமொழி பத்திரம் (அபிடவிட்) மற்றும் அறிவிக்கையில் தெரிவித்துள்ள இதர ஆவணங்களின் அசல் மற்றும் நகலுடன் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பான முழு விவரங்களையும் www.joinindianarmy.nicc.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

Related Stories: