நண்பர்களுடன் மது பார்ட்டியில் குத்தாட்டம்; பின்லாந்து பெண் பிரதமருக்கு போதை பொருள் பரிசோதனை: ஆட்சிக்கு தலைவலியாக மாறியதால் பரபரப்பு

ஹெல்சின்கி: பின்லாந்து பிரதமர் போதை பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட நிலையில், அவருக்கு போதைப் பொருள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனால், அவரது ஆட்சிக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. பின்லாந்து நாட்டில் ஆளும் சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவரான சன்னா மரின் (36) பிரதமராக பதவி வகித்து வருகிறார். உலகின் இளம் வயது பிரதமரான இவர், தனது வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடனம் ஆடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

பிரதமர் சன்னா மரின், போதைப்பொருளை உட்கொண்டு நண்பர்களுடன் குத்தாட்டம் போட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இவர் போதைப்பொருளை பயன்படுத்தினாரா? என்பதை பரிசோதிக்க வேண்டும் எனவும், பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட அவர் பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும் அவர் அளித்த பேட்டியில், ‘நான் எனது நண்பர்களுடன் இணைந்து பார்ட்டியில் பங்கேற்றேன். எந்த போதைப் பொருட்களையும் நான் பயன்படுத்தவில்லை.

எனது தனிப்பட்ட வீடியோ பொதுவெளியில் பகிரப்பட்டுள்ளதை நினைத்து வருத்தம் அடைகிறேன். நடனம் ஆடினேன், பாட்டு பாடினேன். மது உட்கொண்டேன். ஆனால், எந்த போதைப் பொருளையும் பயன்படுத்தவில்லை. நான் செய்தது எல்லாம் சட்டத்துக்கு உட்பட்டதுதான். போதைப்பொருள் தொடர்பாக பரிசோதனை நடத்துவதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. எனது நடத்தையை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. எப்போதும் போல் இருக்கவே விரும்புகிறேன்’ என்றார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா தொற்று விதிமுறைகளை மீறி இரவு நேர கேளிக்கை விடுதிக்கு சென்று வந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி நிலையில், தற்போது மது பார்ட்டி விவகாரம் பிரதமர் சன்னாவுக்கு தலைவலியாக மாறியுள்ளது. இந்த நிலையில், பிரதமர் சன்னா மரினுக்கு நேற்று போதைப் ெபாருள் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் ஒரு வாரம் கழித்து வரும் என்று கூறப்படுகிறது. இந்த முடிவுக்கு பின்னரே, பிரதமர் சன்னா மரின் பதவியில் நீடிப்பாரா? அல்லது அவர் தார்மீக அடிப்படையில் பதவி விலகுவாரா? என்பது தெரியவரும்.

Related Stories: