11 கொடுங் குற்றவாளிகள் விடுதலை நியாயமற்ற நடவடிக்கை; நீதி கேலி கூத்தாக்கப்பட்டுள்ளது: பல்கீஸ் பானு வழக்கில் அமெரிக்க ஆணையம் கண்டனம்..!!

வாஷிங்டன்: 2002ம் ஆண்டு கூட்டு பாலியல் வல்லுறவு மற்றும் கொலை குற்றவாளிகள் 11 பேரை குஜராத் அரசு விடுதலை செய்திருப்பதை (USCIRF) எனப்படும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின் போது கர்ப்பிணி பெண் பல்கீஸ் பானு கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார். அவரின் குடும்பத்தினர் 14 பேர் கொல்லப்பட்டனர். பல்கீஸின் 3 வயது மகள், அவருடைய கண் முன்னே கொல்லப்பட்டார். இவ்வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்றம், 2008ம் ஆண்டு குற்றம் உறுதி செய்யப்பட்டு 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது.

இந்நிலையில், பல்கீஸ் பானு பாலியல் வல்லுறவு மற்றும் கொலை குற்றவாளிகள் 11 பேரையும் குஜராத் அரசு சமீபத்தில் விடுதலை செய்துவிட்டது. குற்றவாளிகளை விடுவிப்பது பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் பேரில் 11 பேர் விடுவிக்கப்பட்டதாக குஜராத் அரசு தெரிவித்தது. இதற்கு நாடு முழுவதும் கண்டன குரல்கள் எழுந்த நிலையில், பல்கீஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கு (USCIRF) எனப்படும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

அந்த அமைப்பின் துணை தலைவர் ஆப்ரகாம் கூப்பர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொடூரமான குற்றத்திற்காக தண்டனைபெற்ற 11 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பது நியாயமற்ற நடவடிக்கை என்றும், இவ்வழக்கில் நீதி கேலி கூத்தாக்கப்பட்டிருப்பதாகவும் விமர்சித்துள்ளார். சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு இந்தியாவின் தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கும் நடைமுறையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளதாக USCIRF மேற்கோள்காட்டியுள்ளது.

Related Stories: